சென்னை-வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளில் ஆய்வு செய்து, குறைபாடு உடைய மீட்டர் கண்டறியப்பட்டால், அதை அகற்றிவிட்டு, புதிய மீட்டரை பொருத்துமாறு, உதவி பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக மின் வாரியம் இலவசமாக மின்சாரம் வழங்கும் விவசாயம், குடிசை வீடுகள் தவிர்த்து, மற்ற மின் இணைப்புகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தி உள்ளது.வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும்; 500 யூனிட்டிற்கு கீழ் மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது; அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளில், இரு மாதங்களுக்கு ஒரு முறையும்; மற்ற பிரிவு மின் இணைப்புகளில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர்.
அதிக மின் பயன்பாடு உள்ள இணைப்புகளில் மின் கட்டணம் குறைவாக வர, மீட்டரில் முறைகேடு செய்து, மின் பயன்பாடு குறைத்து காட்டப்படுகிறது.இதற்கு சில ஊழியர்கள், சரியாக மின் பயன்பாடு கணக்கெடுக்க செல்லாததே காரணம். மீட்டர்களில் பழுது ஏற்படும்போது, மின் பயன்பாடு பதிவாவதில்லை. இதுபோன்ற காரணங்களால், மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதைத் தடுக்க, மின் இணைப்புகளில் தீவிர ஆய்வு செய்து, குறைபாடு உடைய மீட்டர்கள் கண்டறியப்பட்டால், அவற்றை அகற்றிவிட்டு, புதிய மீட்டர்களை பொருத்துமாறு, உதவி பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.