வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''அ.தி.மு.க., செயற்குழுவில் முடிவு செய்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால், சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் எம்.பி.,யானதும் செல்லாது. இதுதொடர்பாக, கோர்ட்டுக்குச் செல்லப் போகிறேன்,'' என., அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.

கோவையில் நேற்று புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், 23 தீர்மானங்களில் எவ்வித திருத்தமும் செய்யக்கூடாது; வேறெந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாதென ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என்றால், எதற்காக இவற்றை தயாரித்தனர்.டிச., 1ல் நடந்த செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர்; ஐந்தாண்டுகளுக்கு யாராலும் மாற்ற முடியாது. செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தை பயன்படுத்தியே சண்முகம், தர்மர் ராஜ்யசபா எம்.பி., ஆகி இருக்கின்றனர் என்பதை மறந்து விட்டார்கள். ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்றால், எம்.பி., ஆனதும் செல்லாது. இதற்கு, நான் கோர்ட்டுக்குச் செல்வேன்.

பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் காரை பஞ்சராக்கினர். பேப்பர் மற்றும் தண்ணீர் பாட்டிலால் தாக்கினர். பொதுக்குழு என்ற பெயரில் அக்கிரமம் நடத்தி இருக்கின்றனர். போலீசார் ஏமாந்திருந்தால், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் தாக்கப்பட்டு இருப்பார்கள். பொதுக்குழு விவகாரத்தால், பன்னீர்செல்வத்துக்கு அனுதாப அலை உருவாகியிருக்கிறது.
பொன்னையன், ஓ.எஸ்.மணியன் போன்ற சீனியர்கள் பேச வேண்டும். ஆனால், சண்முகம் பின்னால் நிற்கின்றனர். சசிகலாவை பார்த்து விட்டோம்; அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஜூலை 11ல் பொதுக்குழு கூடுவதற்கு வாய்ப்பில்லை.
இவ்வாறு, புகழேந்தி கூறினார்.