சென்னையில், சுற்றுச்சூழல் மாசு மற்றும் மனிதனுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயகரமான குப்பை கையாள்வதில், மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது. குப்பையில் இருந்து மாதத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல், ஒரே இடத்தில் கொட்டி வீணாக்கி வருகிறது. அத்துடன் இந்த அபாயகரமான குப்பையால், சுற்றுச்சூழலுக்கும் கடும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
சென்னையில் மக்கும் தன்மையுடைய உணவு, காய்கறி, பழங்கள், மாமிசங்கள், தோட்டக்கழிவுகள், காய்ந்த இலைகள், மலர்கள் சேகரமாகின்றன. அதேபோல், மக்காத பிளாஸ்டிக், தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், அட்டை, காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல்பொருட்கள், இரும்பு கழிவுகள், மரக்கழிவுகள், டயர், டியூப் மற்றும் ரப்பர் பொருட்கள் போன்றவையும் சேகரமாகிறது.
இதைத்தவிர, தீங்கு விளைவிக்கக்கூடிய, வீட்டு உபயோக குப்பையும் அதிகளவில் சேர்கின்றன. வர்ண டப்பாக்கள், பூச்சிக் கொல்லி மருந்து டப்பாக்கள், காலாவதியான மருந்துகள், சி.எப்.எல்., விளக்குகள், சூழல் விளக்குகள், சோபா, மெத்தை, பிளாஸ்டிக் நாற்காலி, உடைந்த பாதரச மானிகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், ஊசிகள், முக கவசம், சானிட்டரி பேட் ஆகிய கழிவுகளும் சேகரமாகின்றன.
மேலும், உபயோகமற்ற கண்டன்சர்கள், சிம் கார்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பிளேட்டிங், சர்க்யூட் போர்டுகள், கொசுபேட், அயன்பாக்ஸ், டார்ச் லைட்டுகள், ரிமோட் கன்ட்ரோல், பயன்படுத்த முடியாத மின் விசிறிகள், 'ஏசி' பெட்டிகள், பிரிஜ், வீட்டு சமையலறை எலக்டிட்ரானிக் கருவிகள், உள்ளிட்ட 1,000 மேற்பட்ட மின்னணு உதிரிபாக கழிவுகளில், 50 சதவீதம் பழைய இரும்பு கடையில் பெறப்பட்டாலும், மீதமுள்ள கழிவுகள் வாங்கப்படாமல், வீடுகளில் தேக்கம் அல்லது குப்பை கிடங்குகளுக்கு செல்கின்றன.
குப்பைக்கு செல்லும் மின்னணு கழிவுகளில், தங்கம், வெள்ளி, தாமிரம், பிளாட்டினம், பல்லேடியம், லித்தியம், கோபால்ட் போன்ற உலோக தாதுக்கள் உள்ளன. மேலும், மின்னணு சாதனங்களில் ஈயம், பாதரசம், காட்மியம், பெரிலியம் போன்ற நச்சு உலோகங்கள், இயற்கையை மாசுப்படுத்தும் 'பி.வி.சி., பிளாஸ்டிக்' கழிவுகள், மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், 'டிரோமினேட்டட் பிளேம் டிடார்டன்கள்' போன்ற அபாயகரமான ரசாயனங்களும் கலந்துள்ளன.
இதுதவிர, மின்னணு தயாரிப்புக்கு பயன்படும் 'செமிகண்டக்டர்கள், சென்சார்கள் ஆகியற்றில், கேடு விளைவிக்கும் ரசாயன மற்றும் வேதிப்பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.குப்பையோடு, குப்பையாக இதுபோன்ற அபாயகரமான கழிவுகள் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டிருப்பதால், அவற்றிலிருந்து நச்சு வேதி பொருட்கள் வெளியேறி, நிலத்தை மாசுப்படுத்துவதோடு, நிலத்தடி நீரையும் மாசுப்படுத்துகிறது.
இதனால், குப்பை கிடங்கிற்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் பல்வேறு விதமான சரும பிரச்னையில் சிக்கியுள்ளனர்.இதுதவிர, அவ்வப்போது சுட்டெரிக்கும் வெயில் அல்லது மர்ம நபர்களால், குப்பை கிடங்கு தீ பற்றும்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுடன் மின்னணு பொருட்களும் எரிந்து, காற்றில் நச்சு வேதிப்பொருட்கள் கலக்கிறது. இதனால், காற்று மாசு ஏற்படுத்துவதுடன், மனிதன் மற்றும் கால்நடைகளுக்கும் சுவாச பிரச்னை, கண் எரிச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுடன் நாளடைவில் புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு வழிகாட்டுதல்
பெருநகரங்களில் குப்பையை எப்படி கையாள வேண்டும்; அவற்றை எப்படியெல்லாம் மறுசுழற்சி செய்து, குப்பை கிடங்கிற்கு செல்லாமல் தடுக்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய விபரங்களுடன், மத்திய அரசு, திடக்கழிவு மேலாண்மை விதி - 2016 கொண்டு வந்தது. இந்த சட்டத்தை சென்னை மாநகராட்சி, 2019ல் தான் ஏற்றுக் கொண்டது.
இந்த சட்டத்தின்படி, 5,000 சதுர அடி பரப்பளவில் இருப்போர் மற்றும் தினசரி 100 கிலோ குப்பை உற்பத்தி செய்வோர், அக்குப்பையை அவர்களே கையாள வேண்டும். வீடுகளில் இருந்து குப்பையை தரம் பிரித்து பெற்று, அவற்றை கிடங்கிற்கு செல்லாமல், உரம் தயாரிப்பது, மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைக்கு, குறிப்பிட்ட தொகை கட்டணமாக பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழிக்காட்டுதல் வழங்கிய இத்தனை ஆண்டுகளில், சென்னையில் 45 சதவீத வீடுகளில் தான், குப்பை தரம் பிரித்து பெறப்படுகிறது. இதில், 30 சதவீத குப்பை மட்டுமே, உரம் தயாரிப்பது, மறுசுழற்சி செய்வது உள்ளிட்டவற்றுக்கு உட்படுத்தப்பட்டு, குப்பை கிடங்கிற்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. மீதமுள்ள 70 சதவீத குப்பை, தரம் பிரிக்காமல் அப்படியே, கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
குப்பையை எப்படி பிரிக்கலாம்?
வீடுகளில், பச்சை, நீல மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் மூன்று வகையான குப்பை தொட்டியை மக்கள் பயன்படுத்தலாம். அதன்படி, பச்சை தொட்டியில் மக்கும் குப்பையும், நீல தொட்டியில் மக்காத குப்பையும், சிவப்பு தொட்டியில் அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய குப்பையையும் கொட்டலாம்.
என்னென்ன செய்யலாம்?
சென்னை மாநகராட்சியில் பெறப்படும் 55.38 லட்சம் கிலோ குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு, மறுசுழற்சிக்கான பொருட்கள் விற்பனை ஆகியவற்றுடன், மின்சாரம், பயோ காஸ் உள்ளிட்டவையும் தயாரிக்க முடியும். அதற்கான திட்டங்களையும் மாநகராட்சி விரைவில் செயல்படுத்த உள்ளது.
மின்னணு கழிவுகள் அதிகரிப்பு
குறிப்பிட்ட கால இடைவெளிக்கு மட்டும் பயன்படுத்த மலிவு விலையில் கிடைக்கும் மின்னணு பொருட்களை அதிகளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர். அவை பயனற்ற பின், மறுசுழற்சிக்கு உகந்ததாக இல்லாததால், லட்சக்கணக்கான கிலோவில் குப்பை கிடங்கில் தேங்கி கிடக்கின்றன. எனவே, மறுசுழற்சியை முறைப்படுத்தாத மின்னணு சாதன பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அபாயகரமான கழிவுக்கு வசதி இல்லை
சென்னையில் அபாயகரமான கழிவுகளை சேகரித்து வைப்பதற்கு, 11 மண்டலங்களில் வசதிகள் உள்ளன. அதேநேரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மண்டலங்களில் அதற்கான வசதிகள் இல்லை. மேலும், அபாயகரமான குப்பையை அழிப்பதற்கான வசதியும் சென்னையில் இல்லை.
ரூ.10 கோடி வருவாய் வாய்ப்பு!
சென்னை மாநகராட்சியில், தினசரி 55.38 லட்சம் கிலோ குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 98 சதவீத குப்பை, வருவாய் ஈட்டி தரக்கூடியதாக உள்ளது.மக்கும் குப்பையில், உரம் தயாரித்தல், மறுசுழற்சி பொருட்களை விற்பனை செய்தல் போன்றவற்றின் வாயிலாக, மாதத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்ட முடியும்.
ரூ.64 லட்சம் மட்டுமே!
சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், உரம் தயாரிப்பு மையங்கள் உள்ளன. இதில், தினசரி 6.5 லட்சம் கிலோ உரம் தயாரிக்கப்படுகிறது.மேலும், 4.5 லட்சம் கிலோ குப்பை மறுசுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் நாறு தயாரிக்க 1.50 லட்சம் கிலோ வழங்கப்படுகிறது. இவற்றின் வாயிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை, 60 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. இதுதவிர, 50 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், திருச்சியில் உள்ள 'டால்மியா சிமென்ட்' நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உரம் மற்றும் மறுசுழற்சி வாயிலாக கிடைக்கும் பொருட்களில் இருந்து பெறப்படும் தொகை, அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு துாய்மை பணியாளருக்கு 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கிறது.
வாகன கழிவில் சிற்பங்கள் தயாரிப்பு
சென்னை புதுப்பேட்டை, பேசின்பிரிஜ் பகுதியில், 2019ல் வாகன பழுது நீக்கும் நிலையத்தில் இருந்து, 15 ஆயிரம் கிலோ கழிவுகள் கிடைத்தன. ஆந்திராவை சேர்ந்த 15 கலைஞர்கள், இந்த கழிவுகளை பயன்படுத்தி, பல்வேறு வகையான சிற்பங்கள் உருவாக்கினர்.இவர்கள் வடித்த மான், ஆமை, நண்டு, இறால், சுறா, சிறுத்தை, கடல்கன்னி, மீனவர் படகு, கப்பல் மாலுமி, ஜல்லிக்கட்டு வீரர், உழவர், மெல்லிசை கலைஞர், பரதநாட்டியம் ஆடும் பெண் உள்ளிட்ட 14 வகையான சிற்பங்கள், தலைமை செயலகம், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், இரும்பு கழிவுகளில் இருந்தும் சிற்பங்கள் செய்து, பல இடங்களில் வைக்கலாம்; பொதுமக்களுக்கும் விற்பனை செய்யலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பழைய பொருட்களை வாங்கும்
வியாபாரிகள் சொல்வது என்ன?
இரும்பு, தகரம், பித்தளை, ஈயம், செம்பு, எவர்சில்வர், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை வாங்குவதற்கென்று தனித்தனி மொத்த வியாபாரிகள் உள்ளனர். இதேபோல், மின்னணு சாதனங்களில் உள்ள பொருட்களை வாங்குவதற்கும் சில வியாபாரிகள் உள்ளனர்.
மின்னணு பொருட்களை பொறுத்தமட்டில், கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், மொபைல் போன், ரிமோர்ட், டிவி உள்ளிட்டவற்றை, மக்களிடமிருந்தோ, சில்லரை வியாபாரிகளிடமிருந்தோ வாங்கி கொள்கிறோம். அவற்றை, தரம்பிரித்து, தேவைக்கேற்ப உடைத்து அந்தந்த மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். உதாரணமாக, ஒரு 'டிவி' வந்தால், அதை கிலோ 5 ரூபாய் என்ற விலையில் வங்கி, பின், 'டிவி'யை உடைத்து, அதனுள் இருக்கும் மின்னணு போர்டுகளை பிரித்து எடுக்கின்றனர். போர்டுகளில் பிளாஸ்டிக், உலோகங்களை தனித்தனியாக பிரித்து, கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
எங்களிடமிருந்து உலோக கலவையை வாங்கி செல்லும் மொத்த வியாபாரிகள், அவற்றை ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அங்கு, உலோக கலவைகள், ஒரு சூடேற்றப்பட்ட கலனில் மொத்தமாக கொட்டப்பட்டு, பின் தனித்தனி உலோகமாக பிரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களில் உள்ள உலோகங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வெப்ப நிலையில் உருகும் தன்மை உடையது. இதற்கான ஆலைகள் ஆங்காங்கே இருந்தாலும், கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும்பாலான ஆலைகள் இயங்கி வருகின்றன.
பழைய படுக்கை விரிப்புகள், மரப்பொருட்கள் உள்ளிட்டவற்றில், அவற்றை மீண்டும் பயன்படுத்தும் தன்மையை பொருத்து வாங்கி கொள்கிறோம். ஒரு பொருள் உருகும் தன்மை கொண்டாகவும், எரிந்து சாம்பலாகும் தன்மையாகவும் இருக்கும். வியாபாரிகளை பொருத்தவரையில், உருகும் தன்மையுடைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.- பெருமாள்,பழைய இரும்பு பொருட்கள் வியாபாரி, சென்னை
சாலையில் வீச வேண்டாம்!
மாநகராட்சி திடக் கழிவு மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட அதிக வெப்பத்தில் உருகும் தன்மையுடைய பொருட்களை, பழைய இரும்பு கடைகளில் வாங்கி கொள்கின்றனர். குப்பை வண்டிகளுக்கு அவை வருவதில்லை. அதேநேரம், பல்பு, கண்ணாடி உள்ளிட்ட சிறிய பொருட்கள், குப்பை வண்டியில் போடப்படுகின்றன.
ஆனால், வீடுகளில் தேவையற்ற நிலையில் இருக்கும், கட்டில், ஷோபா உள்ளிட்ட மரப்பொருட்கள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றையும் துாய்மை பணியாளர்களிடம் அளிக்கலாம். இவற்றை வழக்கமாக குப்பை எடுக்க வரும்போது கொடுக்க வேண்டாம். வீட்டில் பழைய பொருட்கள் இருப்பது குறித்தும், அவற்றை எடுத்து செல்லுமாறு துாய்மை பணியாளர்களிடம் தகவல் தெரிவித்தால் போதுமானது. துாய்மை பணியாளர், வழக்கமான பணியை முடித்து விட்டு, பிற்பகலில் வந்து, வீடுகளில் உள்ள பழைய மர பொருட்களை எடுத்து செல்வார். அவை, மறு சுழற்சிக்கு அல்லது எரியூட்டும் ஆலைக்கு எடுத்து செல்லப்படும்.
அவ்வாறு, துாய்மை பணியாளர் வரவில்லை என்றால், சுகாதார ஆய்வாளர் அல்லது 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். எனவே, வீட்டில் சேகரமாகிற பழைய பொருட்களை, சாலையோரங்களில் பொதுமக்கள் வீச வேண்டாம். அவற்றை மாநகராட்சியுடம் ஒப்படையுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
என்ன விலைக்கு போகிறது
குப்பை பொருட்கள்சென்னை மாநகராட்சியில் தயாரிக்கப்படும் உரம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு கிலோ, ௩ ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் பொதுமக்களுக்கு சில்லரை விற்பனையில், கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 15 நாட்களுக்கு ஒருமுறை, 2 லட்சம் கிலோ உரங்கள், மாநகராட்சி பூங்காக்களுக்கு வழங்கப்படுகின்றன.