சென்னை : 'திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்ற பேச்சாளர்கள், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை எதிர்த்து மட்டுமே பேசியதால், நாங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தி.மு.க., இளைஞரணி சார்பில், தமிழகம் முழுதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை, ஜூன் 5-ம் தேதி, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி துவங்கி வைத்தார்.'தி.மு.க., - எம்.பி.,க்கள் கலாநிதி, செந்தில்குமார், அப்துல்லா, கனிமொழி, எம்.எல்.ஏ.,க்கள் எழிலரசன், தாயகம் கவி, பரந்தாமன், எழிலன், செய்தி தொடர்பு இணை செயலர்கள் தமிழன் பிரசன்னா, ராஜிவ் காந்தி, தி.மு.க., ஆதரவு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என 20 பேர், திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பயிற்சி அளிப்பர்' என, உதயநிதி அறிவித்திருந்தார்.
பாசறையில் பேசும் பேச்சாளர்கள், ஒரு மணி நேரம் பேசினால், அதில் 50 நிமிடங்களுக்கு மேல், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பற்றியே பேசுகின்றனர். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்டோரின் பெயர்களை சொன்னதை விட, பிரதமர் மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கேவார், கோல்வால்கர், ஹிந்து மகா சபை, சாவர்க்கர் என, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பற்றியும், அதனால், தமிழகத்திற்கு, தமிழ் மொழி கலாசாரத்திற்கு ஆபத்து என்பது பற்றியே பேசியுள்ளனர்.பாசறையில் பங்கேற்ற நிர்வாகிகள், இதை ரசித்தாலும், தி.மு.க.,வினரால் அழைத்து வரப்பட்ட, கட்சிக்கு தொடர்பில்லாத புதியவர்கள், குறிப்பாக கல்லுாரி மாணவர்கள், இந்த பேச்சுகளால் ஈர்க்கப்படவில்லை.
'இது திராவிட மாடல் பயிற்சி முகாமா அல்லது சங் பரிவார் அமைப்புகள் பற்றி பாடமெடுக்கும் பயிற்சி வகுப்பா?' என, அவர்களில் பலர் எதிர் கேள்வி எழுப்பியுள்ளனர்.சென்னை உள்ளிட்ட பல இடங்களில், நீதிக்கட்சி தலைவர்களான தியாகராயர் பற்றி, பேச்சாளர்கள் கேட்டபோது, தி.மு.க.,வில் பலருக்கே அவரை தெரியவில்லையாம். பல இடங்களில் தி.மு.க.,வினர், 'முக்கிய நிர்வாகிகள் 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக ஊடகங்களில், பா.ஜ.,வை எதிர்த்து தான், 99 சதவீதம் பதிவுகளை இடுகின்றனர்.
நாங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்வது, அ.தி.மு.க.,வை எதிர்த்தா; பா.ஜ.,வை எதிர்த்தா?' என, கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, 'பா.ஜ., என்பது நம் சித்தாந்த எதிரி. அதுமட்டுமல்ல, மத்தியில் தனி பலத்துடன் ஆட்சியில் உள்ளது. அதனால் எதிர்க்கிறோம்' என, நிர்வாகிகள் சமாதானப்படுத்தி உள்ளனர்.பயிற்சி முகாமில் பங்கேற்ற சிலரிடம் பேசியபோது,
'தி.மு.க.,வுக்கு நேர் எதிரி அ.தி.மு.க., தான். கன்னியாகுமரி, கோவை போன்ற ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே, பா.ஜ.,வை களத்தில் தி.மு.க., எதிர்கொள்கிறது. உண்மை அப்படி இருக்கும்போது, அ.தி.மு.க.,வை விட, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை எதிரியாக மக்களிடம் அடையாளப்படுத்தி கொண்டே இருந்தால், அது பா.ஜ., வளர்ச்சிக்கே வழி வகுக்கும்' என்றனர்.