கோவை:கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த, இருவர் கைது செய்யப்பட்டனர்.கோவை தொண்டாமுத்துார் ரோடு சத்யா நகரை சேர்ந்தவர் மனோஜ், 31. இவர், கவுலி பிரவுன் ரோட்டில் அமைந்துள்ள, மைக்ரோ லேபில் டெக்னீசியன் ஆக வேலை பார்க்கிறார்.இவர், தடாகம் ரோடு ஆவின் ஊழியர் குடியிருப்பு முன், சாலையோர தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர், தனக்கும் சேர்த்து சாப்பிட்ட பில் பணம் கொடுத்து விடுமாறு கூறினார்.
'முன்பின் அறிமுகம் இல்லாதவருக்கு, நான் ஏன் பில் பணம் தர வேண்டும்' என்று மனோஜ் கேட்டார். உடனே அந்த வாலிபர், மனோஜின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டார்.அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களையும், அந்த வாலிபர் மிரட்டினார். அதிர்ச்சியடைந்த மனோஜ், ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.விசாரித்த போலீசார், பி.என்.புதுார் ராமசாமி வீதியை சேர்ந்த தினேஷ் குமார், 25, என்ற அந்த வாலிபரை கைது செய்தனர்.இதேபோல, சிங்காநல்லுார் நீலிக்கோணாம்பாளையம் பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்த, ஆட்டோ டிரைவர் சுதாகரன், 38, என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மோனி (எ) மோகனசுந்தரம், 23, என்பவரும் கைது செய்யப்பட்டார்.