வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-'இந்தியா, 'மங்கள்யான்' செயற்கைக் கோளை, பஞ்சாங்கத்தில் நேரம் காலம் பார்த்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியதுதான் அதன் வெற்றிக்கு காரணம்' என, நடிகர் மாதவன் சமீபத்தில் கூறியது, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கை மையமாக வைத்து, ராக்கெட்ரி என்ற தமிழ் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.நடிகர் மாதவன் தயாரித்து இயக்கியுள்ள இப்படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இது தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் மாதவன் பேசியதாவது:பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் ஞானிகள், வானவியல் சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கத்தை கணித்துஉள்ளனர். அந்த பஞ்சாங்கத்தின்படி, சுபமுகூர்த்த நேரத்தில் மங்கள்யான் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக் கோளின் ஆயுள் ஆறு மாதங்கள் என விஞ்ஞானிகள் கணித்த நிலையில், இது ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இதற்கு பஞ்சாங்கப்படி செயற்கை கோளை அனுப்பி, ஒவ்வொரு இயக்கத்தையும் உரிய நேரத்தில் செயல்படுத்தியது தான் காரணம். அமெரிக்கா போன்ற நாடுகள், இது போன்ற ஆய்வுக்கு செய்யும் செலவில், ஏழில் ஒரு பங்கு மட்டுமே இந்தியா செலவு செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. 'அறிவியல் பற்றி தெரியவில்லை என்றால், மாதவன் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்; பஞ்சாங்கத்தை குறிப்பிடக் கூடாது' என, ஒருவர் தெரிவித்துள்ளார். மாதவன் பேச்சு அபத்தமாக உள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.அதே நேரத்தில் இஸ்ரோ நல்ல நேரம் பார்த்து தான் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.