சென்னை:பா.ஜ., அறிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு, பேராதரவு கிடைத்து வருகிறது. எதிரிக் கட்சியினர் கூட, அவருக்கு ஓட்டுப் போட ஆயத்தமாகி வருவதால், அனைத்துக் கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்ப, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா முடிவு செய்துள்ளார்.
வரும் ஜூலை 18ம் தேதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த, திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்; நேற்று முன்தினம், வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்; நாளை வேட்புமனு தாக்கல்செய்கிறார்.
ஆதரவு
பா.ஜ., கூட்டணியில் இல்லாத, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 'முர்மு, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஆதரிக்க வேண்டும்' என, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, நாடு முழுதும் பல்வேறு கட்சித் தலைவர்களிடம், அவர் ஆதரவு திரட்டி வருவதாக கூறப்படுகிறது.இதையெல்லாம் விட முக்கியமாக, காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி நடத்தி வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும், முர்முவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.
'பா.ஜ.,வை சேர்ந்தவர் என்றாலும், பழங்குடியின வேட்பாளரை எதிர்ப்பது வரலாற்று தவறாகி விடும்' என, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இப்படி பா.ஜ.,வுக்கு எதிரிக் கட்சியினராக உள்ளோர் பலரும், முர்முவை ஆதரிக்க விரும்புவதால், தெலுங்கு தேசம், அகாலிதளம் போன்ற கட்சிகளும், காங்கிரசில் உள்ள பழங்குடியின எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களும் முர்முவை ஆதரிப்பர் என, பா.ஜ., எதிர்பார்க்கிறது.
தற்போதைய நிலையில், முர்முவின் வெற்றி, 100 சதவீதம் உறுதியாகி உள்ளது.ஆனால், 2017-ல் ராம்நாத் கோவிந்த் பெற்ற 65 சதவீதத்தையும் தாண்டி, அதிக ஓட்டு சதவீதத்தை பெற வேண்டும் என, பா.ஜ., தலைமை விரும்புகிறது. அதனால் தான், அனைத்து கட்சிகளுடன் பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசியுள்ளனர்.
வரலாற்றுப் பிழை
அடுத்த கட்டமாக, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க உள்ள, 776 எம்.பி.,க்கள், 4,033 எம்.எல்.ஏ.,க்களுக்கும் கடிதம் அனுப்ப, நட்டா முடிவு செய்துள்ளார்.'நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்தில், முதல் முறையாக, பழங்குடியினர் ஒருவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.'எனவே, முர்முவுக்கு எதிராக ஓட்டளித்தால், அது வரலாற்றுப் பிழையாகி விடும். சமூக நீதிக்கு எதிரான செயலாக அமைந்து விடும்' என்ற வாசகங்கள், அந்த கடிதத்தில் இடம் பெறும் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 18-ம் தேதிக்கு முன், நாடு முழுதும் குறிப்பாக பெரிய மாநிலங்கள் அனைத்திற்கும் நேரில் சென்று ஆதரவு திரட்ட, முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, பா.ஜ., சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 14 பேர் குழு செய்து வருகிறது.
அதிர்ச்சி
முர்முவுக்கு கிடைத்து வரும் பேராதரவு, அவரை எதிர்த்து களம் காணும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரை முன்னிறுத்தியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா, சரத் பவார் ஆகியோரை தொடர்பு கொண்ட யஷ்வந்த் சின்ஹா, 'வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றாலும் குறைந்தது 35 சதவீத ஓட்டுகளையாவது பெற வேண்டும். 'எப்படியாவது, பா.ஜ.,வை தீவிரமாக எதிர்க்கும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள், முர்முவுக்கு சென்று விடாமல் தடுக்க வேண்டும்' என கூறியுள்ளதாக தெரிகிறது