வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை சந்திக்கவும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்,'' என, கட்சி செய்தி தொடர்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: எல்லாம் வந்த பின், அனைவருடைய முதுகிலும் குத்திவிட்டு, கட்சியை கம்பெனி போல் நடத்த நினைக்கின்றனர்; அது ஒருபோதும் நடக்காது. வேண்டாதவராக இருந்தாலும் பரஸ்பரம் பேசிக் கொள்வது தான் ஜனநாயகம். ஆனால், பொதுக்குழு மேடையில் அமர்ந்திருந்தவர்கள், பன்னீர்செல்வம் வந்தபோது தலையை குனிந்து கொண்டனர்.
பன்னீர்செல்வம் மீது குடிநீர் பாட்டில் வீசுகின்றனர்; தள்ளி விடுகின்றனர். எத்தனை வெறுப்பு இருந்தாலும், அதை மேடையில் காண்பிக்கக் கூடாது. பழனிசாமி தரப்பினர், கட்சியை கைப்பற்ற துடிக்கின்றனர்; அது நடக்காது. தொண்டர்கள் பன்னீர்செல்வத்தை நம்புகின்றனர். பொதுக்குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அங்கீகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்து விட்டனர். எனவே, அவர்கள் பதவி காலாவதியாகி விட்டது.
தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது.முறையாக பொதுக்குழு தேதியை பன்னீர்செல்வம் அறிவிப்பார். புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியை வழிநடத்துவார். கட்சியை வழிநடத்த, தொண்டர்களை உற்சாகப்படுத்த, பன்னீர்செல்வம் நிறைய திட்டங்களை வைத்துள்ளார். தொண்டர்களை சந்திக்க, சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த, அவர்களுக்கு தகுதி கிடையாது. ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தின்றி பொதுக்குழு நடத்த முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.