வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-அ.தி.மு.க.,வில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பழனிசாமி தரப்பினர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், 23ம் தேதி நடந்தது. இதில் ஒற்றைத் தலைமைப் பதவியை ஏற்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படாதது, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பன்னீர்செல்வம் தரப்பு, கடைசி நேரத்தில் நீதிமன்றம் உதவியுடன், ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்து விட்டது. இந்த சூழ்நிலையில், மீண்டும் அடுத்த பொதுக்குழுக் கூட்டம், ஜூலை 11ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிக்காததால், கூட்டத்தை நடத்த இயலாது என அவர் தரப்பினர் கூறி வருகின்றனர். அதற்கு பதிலடியாக,ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக, பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை.புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காமல், அந்த தீர்மானத்தை நிராகரித்ததால், அவர்கள் பதவிகள் தான் பறிபோயின என பன்னீர்செல்வம் தரப்பு கூறி வருகிறது.
அடுத்த பொதுக்குழுவை நடத்த விடாமல், பன்னீர்செல்வம் தரப்பு மீண்டும் நீதிமன்றம் செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை முறியடிக்கவும், பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, மீண்டும் பொதுச் செயலர் பதவியை உருவாக்கி, அதில் பழனிசாமியை அமர வைக்கவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பழனிசாமி தரப்பில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
அதேபோல் பன்னீர்செல்வம் தரப்பிலும், ஒருங்கிணைப்பாளர் பதவியை தக்க வைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பதவி பறிப்பு, கட்சியிலிருந்து நீக்கம் போன்ற நடவடிக்கைகள் அரங்கேற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.