வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--வெங்கையா நாயுடுவுக்கு, மீண்டும் ஒருமுறை துணை ஜனாதிபதி வாய்ப்பு வழங்கலாமா என்பது குறித்து, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசித்து வருவ தாக தகவல் வெளியாகிஉள்ளது.
பா.ஜ., மூத்த தலைவரான வெங்கையா, அக்கட்சியின் தேசியத் தலைவர், மத்திய அமைச்சர் என, பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2014-ல், பிரதமர் மோடி அமைச்சரவையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அவர், 2017-ல் துணை ஜனாதிபதி ஆக்கப்பட்டார்.ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வாயிலாக, பா.ஜ.,வுக்கு வந்த வெங்கையா, தீவிர அரசியல் ஆர்வம் கொண்டவர்.
அதனால், 2017-ல் துணை ஜனாதிபதி பதவிக்கு அவரது பெயர் அடிபட்டபோது, வெளிப்படையாக மறுத்தார். ஆனாலும், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, துணை ஜனாதிபதியானார்.துணை ஜனாதிபதி தான், ராஜ்யசபா தலைவர். சமாதானம்பா.ஜ., கொள்கையில் ஊறியவரான வெங்கையா, பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற கை கொடுத்தவர். பேச்சாற்றல், அனைத்து கட்சிகளிடமும் உள்ள நட்பு ஆகியவற்றால், பிரச்னையின்றி சபையை வழிநடத்தினார்.
இதனால், தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பர் என எதிர்பார்த்தார். ஆனால், பழங்குடியினரான திரவுபதி முர்முவை, பா.ஜ., அறிவித்து விட்டது. அதிருப்தி அடைந்த அவரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபோலே ஆகியோரை தொடர்பு கொண்ட வெங்கையா, 'நான் என்ன தவறு செய்தேன்?' எனக் கேட்டதாக கூறப்படுகிறது.கடந்த 2002-ல் நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்திற்குப் பின், பா.ஜ., தேசியத் தலைவரான வெங்கையா, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, நெருக்கடிகளில் இருந்து மீண்டு வர உறுதுணையாக இருந்துள்ளார். 2013-ல், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் ஆதரவு தெரிவித்தவர். விளக்கம்இதையெல்லாம், இப்போது சுட்டிக்காட்டி, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்திய பிரதமர் மோடியும், அமித்ஷாவும், 'நாட்டின் நலன் கருதியும், கட்சியின் எதிர்கால நலன் கருதியும் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 'பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை எப்படி உடைத்தோமோ, அதுபோல ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தையும் உடைக்க வேண்டியுள்ளது' என, விளக்கம் அளித்துள்ளனர்
.இந்நிலையில், வெங்கையாவை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு மீண்டும் ஒருமுறை துணை ஜனாதிபதி வாய்ப்பு வழங்கலாமா என்பது குறித்து, பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், வெங்கையா சற்று ஆறுதல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. திரவுபதி முர்முவும், வெங்கையாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.