வாலாஜாபாத்-''ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயமாக மாற்றும் பிரசாரத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் மேற்கொள்ளும்,'' என, அந்த அமைப்பின் அகில பாரத செயல் தலைவர் அலோக்குமார் கூறினார்.
காஞ்சிபுரம் அடுத்த, மேல் பொடவூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத செயற்குழு கூட்டம் 22ம் தேதி துவங்கியது. வரும் 27ம் தேதி வரை செயற்குழு நடக்கிறது.செயற்குழு கூட்டத்திற்கு வந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத செயல் தலைவர் அலோக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம்,கண்டிவாக்கம், துளசாபுரம் கிராமத்திற்கு நேற்று நிர்வாகிகளுடன் சென்றிருந்தேன்.
அங்குள்ள விநாயகர், அம்மன் கோவில்களில், சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதற்கான காரணத்தை விசாரித்த போது, சிலைகளை உடைத்தவர் மனநிலை சரியில்லாதவர் என்றும், அவர் குடி போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.மன நிலை பாதித்தவர், இதுபோன்று செய்ய வாய்ப்பில்லை. இது போன்ற சம்பவம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளது.விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, தமிழக கவர்னருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளோம். காவல் துறைக்கு அவர் உத்தரவிட்டு, இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்.
சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.உ.பி., மாநிலம் காசி விஸ்வநாதர் கோவிலில்சமீபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், வெளியே வந்த விஷயங்கள் மற்றும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையை எல்லாம் பார்க்கும் போது, மசூதி இருக்கும் இடத்தில், பெரிய சிவலிங்கம் இருந்தது.இது, ஏற்கனவே சிவன் கோவிலாக இருந்திருக்கலாம். அதற்குரிய அடையாளங்கள் நிறைய உள்ளன.
மசூதியாக இருக்கும் இடங்களில், ஹிந்து கோவிலுக்குரிய அடையாளங்கள் இருந்தால், அங்கு கண்டிப்பாக ஹிந்து கோவில்கள் எழுப்பப்படும். தீவிரவாத குழுக்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன. வரும் காலங்களில், கோவில் நிர்வாகம், பக்தர்கள், ஆன்மிகத்தை சேர்ந்தவர்களிடம் இருக்க வேண்டும். விஷ்வ ஹிந்து பரிஷத் 1964-ல் துவக்கப்பட்டது. வரும் 2024ல், 60 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. ஒருங்கிணைந்த ஹிந்து சமுதாயமாக மாற்றும் பிரசாரத்தை, விஷ்வ ஹிந்து பரிஷத் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.