திண்டிவனம்,-திருமணமான மூன்றே நாட்களில், புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 25; கொத்தனார். இவர், நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன் அப்பெண் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மனமுடைந்த குமரேசனுக்கு, நிச்சயித்த தேதியில், ஏப்பாக்கத்தைச் சேர்ந்த அவரது அத்தை மகளான தேவப்பிரியாவுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமக்கள் இருவரும், புதுாரில் உள்ள வீட்டில் இருந்தனர்.நேற்று மதியம், 2:30 மணியளவில் வயலுக்குச் செல்வதாக கூறி சென்ற குமரேசன், வயல்வெளியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.