வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
அ.பிச்சுமணி அய்யர், நெல்லையிலிருந்து எழுதுகிறார்:
தமிழகத்தில், ஈ.வெ.ரா., முதல் இன்றைய அரசியல் தலைவர்கள் வரை, பிராமண விரோத போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்தக் காலத்து பிராமணர்கள் பேசாத சமஸ்கிருதத்தையும், பின்பற்றாத மனு சாஸ்திரத்தையும், இன்னும் பழைய விஷயங்களையும் சொல்லி, ஜாதி துவேஷத்தை விதைக்கின்றனர். இப்படி, பிராமணர்களுக்கு எதிராக பேசுபவர்கள், 'மெஜாரிட்டி' என்பதால், தமிழக மக்களில் பலரும், அவர்கள் பேச்சை எளிதாக நம்புகின்றனர். அதேநேரத்தில், பிராமணர்களுக்கே உரிய குணமான, 'நமக்கேன் வம்பு' என்ற போக்கில், 70 ஆண்டுகளாக ஒதுங்கிப் போகின்றனர்.
அதனால் தான், இன்று அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாகவோ, பல்கலை துணைவேந்தர்களாகவோ, கல்லுாரி போராசிரியர்களாகவோ, அரசு டாக்டர்களாகவோ, அரசு இன்ஜினியர்களாகவோ, நீதிபதிகளாகவோ, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாகவோ, அமைச்சர்களாகவோ, இந்த சமூகத்தினரால் பதவி வகிக்க முடியவில்லை.
கடந்த, 1970 - 80களில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காததால், பிராமண இளைஞர்கள் வேலை தேடி மும்பை, டில்லிக்கு சென்றனர்; 1990களில் ஐ.டி., நிறுவனங்களில் சேர்ந்து படித்து, இன்று வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.
தமிழகத்தில், பிராமணர்களுக்கு எதிராக பேசும் தலைவர்கள், தங்களுக்கு கணக்கு பார்க்க, 'பிராமின் ஆடிட்டரை'யும், சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில், 'பிராமின் டாக்டரை'யும் வைத்துக்கொள்வர். திராவிட கட்சிகளின் தலைவர்கள் பலரும், தனியார் மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுகின்றனர்; அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள், அந்நாட்டவரையோ அல்லது சீனர்களையோ அல்லது வேறு நாட்டவரையோ திருமணம் செய்து கொள்கின்றனர்.அதனால், இன்னும், 30 ஆண்டுகளில் பிராமணர் சமூகமே இல்லாமல் போகும் அளவிற்கு நிலைமை மாறி வருகிறது; இது, தடுக்கப்பட வேண்டும்.
பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளை, பிளஸ் 2 முடித்த பின், இந்தியாவிலேயே வேலை கிடைக்கும் வகையிலான படிப்பை படிக்க வைக்க வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்; வழக்கறிஞராக்க சட்டம் பயில வைக்க வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யாதீர்கள். தமிழகம் தான் நம் தாய் வீடு. பிராமணர்கள் நலனுக்காக சங்கம், அமைப்பு நடத்துவோர் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்க வேண்டும்; ஆளுக்கொரு மாணவரை தத்தெடுத்திட வேண்டும்.
தமிழகத்தில் பிராமணர்களே இல்லாத நிலையை உருவாக்க, திராவிட தலைவர்கள் திட்டமிட்டு பணியாற்றுகின்றனர். அதனால், உங்கள் காலத்திலேயே பிராமணசமூகம் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.