வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சமீப காலமாக அமலாக்கத்துறை திட்டமிட்டு எதிர்க்கட்சி முக்கிய புள்ளிகள் மீது வழக்கு தொடுத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. காங்., தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் மீது 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் பண பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

ராகுல் ஐந்து நாட்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார். உடல் நிலை காரணமாக, சோனியா அடுத்த மாதம் ஆஜராக உள்ளார். இந்த வழக்கை எதிர்த்து காங்., நாடு தழுவிய போராட்டம் நடத்தியது.
ஒன்றும் செய்வதில்லை
புதுடில்லியில், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டதில் அரசியல் சதி உள்ளதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தங்களை மட்டும் குறிவைத்து வழக்கு தொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதே சமயம் பா.ஜ.,வினரை யும் பிற கட்சிகளில் இருந்து பா.ஜ.,வுக்கு தாவியவர்களையும் அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஒன்றும் செய்வதில்லை எனவும், எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் சாரதா சிட் பண்டு ஊழலில் திரிணமுல் காங்.,சை சேர்ந்த முகுல் ராய், காங்கிரசை சேர்ந்த ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இந்நிலையில், முகுல் ராயும், ஹிமந்த பிஸ்வா சர்மாவும் பா.ஜ.,வுக்கு தாவினர். ஹிமந்த பிஸ்வா சர்மா தற்போது பா.ஜ., ஆட்சி நடத்தும் அசாமின் முதல்வராக உள்ளார்.அதனால் தான், சாரதா சிட் பண்டு மோசடி வழக்கில் அவர்களை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதே போன்ற புகாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பா.ஜ., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வைத்தன.
சட்ட விரோத பணப் பரிமாற்ற மசோதா
கடந்த, 2014ல் பா.ஜ., தலைமையில் மத்திய அரசு அமைந்தது முதல் எதிர்க்கட்சியினர் மீதுஏராளமான வழக்கு களை அமலாக்கத் துறை தொடுத்துள்ளது. அமலாக்கத் துறைக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. இந்தியாவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை மத்திய அரசின் அனுமதியின்றி 'சம்மன்' அனுப்பி வழக்கு தொடுக்கும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு மட்டுமே உள்ளது. ஐ.நா., பொதுச் சபைக்கு இந்தியா அளித்த உறுதிப்படி, 2002ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, சட்ட விரோத பணப் பரிமாற்ற மசோதாவை தயாரித்தது. ஆனால், 2005ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் அமலாக்கத் துறை சட்ட விதிமுறைகளை உருவாக்கியது. அப்போது காங்., தலைவர் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தை பயன்படுத்தி அமலாக்கத் துறை சோதனை நடத்துவது, கைது செய்வது, சொத்து களை முடக்குவது போன்றவற்றை எதிர்த்து, இருநுாறுக்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரத்தை குறைக்கவும் அம்மனுக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.ஆனால், அவ்வாறு அமலாக்கத் துறையின் அதிகாரத்தை குறைத்தால் அது, பிரான்சை தலைமையிடமாக வைத்து செயல்படும் சட்ட விரோத நிதி நடவடிக்கைகளைகட்டுப்படுத்தும், எப்.ஏ.டி.எப்., அமைப்பின் கொள்கையில் இருந்து இந்தியா மாற வழி வகுத்து விடும்.

பணப் பரிமாற்றம்
உதாரணமாக இந்த அமைப்பு கூறியபடி பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை பாக்., தடுக்கத் தவறியதால், அந்நாட்டை பழுப்பு பட்டியலில், எப்.ஏ.டி.எப்., சேர்த்துள்ளது. இதனால் சர்வதேச நிதியுதவியை பாக்., பெறுவது கடினமாகியுள்ளது. தற்போது சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அமலாக்கத் துறையின், 2,500 பணியிடங்களில்,ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அதனால் அமலாக்கத் துறையின் வலிமையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
அமலாக்கத் துறை, 2014 முதல் தற்போது வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தொடுத்துள்ள வழக்கு விபரங்கள்:
* காங்., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் மற்றும் அவர் மகனும் லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி மீதான ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு
* காங்கிரசின் பூபேந்தர் ஹூடா மீது மானேசர் நில ஊழல் வழக்கு
* சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா, லண்டனைச் சேர்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியிடம் வாங்கிய இரு சொத்துக்கள் தொடர்பான வழக்கு
* மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின், 2,500 கோடி ரூபாய் மோசடியில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவாருக்கு உள்ள தொடர்பு குறித்த வழக்கு
* ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோரின் இந்திய ரயில்வே ஊழல் வழக்கு
* சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் மீது மணல் கொள்ளை வழக்கு
* திரிணமுல் காங்., தலைவர்கள் மீதான நாரதா ஊழல் வழக்கு
* ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர், சச்சின் பைலட் மீதான வழக்கு
* ம.பி., முன்னாள் முதல்வரும் காங்., மூத்த தலைவருமான கமல் நாத் மீதான, 3,600 கோடி ரூபாய் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு
*புதுடில்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது, சட்ட விரோதமாக, 16 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்த வழக்கு
* பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்., தலைவருமான சரண்ஜித் சிங் மீது லஞ்ச ஊழல் வழக்கு
* மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் உறவினரும், திரிணமுல் காங்., தலைவருமான அபிஷேக் பானர்ஜி மீது நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு
* ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு உள்ள தொடர்பு குறித்த வழக்கு.