மதுரை: அ.தி.மு.க.,வில் சதி செய்தவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் தண்டனை வழங்குவார்கள் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியிருந்தார்.
இந்நிலையில், டில்லி சென்றிருந்த பன்னீர்செல்வம் இன்று சென்னை வந்து அங்கிருந்து மதுரை வந்தடைந்தார்.
அங்கு நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். தொண்டர்களுடனேவே நான் இருப்பேன். இன்றுள்ள அசாதாரணமான சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது. எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது என்பதற்கு கூடிய விரைவில், அவர்களுக்கு மக்களே நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள். செய்த தவறுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்கள் உரிய பாடத்தை தண்டனையை வழங்குவார்கள்.

ஜெயலலிதா இதயத்தில் இருந்து என்னை நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தொண்டனை பெற்றது எனது பாக்கியம் என ஜெயலலிதா சான்றிதழ் கொடுத்துள்ளார். இதைவிட வேறு எந்த சான்றிதழும் தேவையில்லை. எனது அரசியல் எதிர்காலத்தை மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் நிர்ணயிப்பார்கள். எல்லா சிக்கலும் விரைவில் தீரும். சிக்கலுக்கு யார் காரணம் என்பது எனக்கு தெரியும்இவ்வாறு அவர் கூறினார்.