வேலுார்: மேகதாது அணை விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் செயல்பாடு சட்ட விரோதமானது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுகுளம் பகுதியில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் இணையும் விழா நடந்தது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் செயல்பாடு சட்ட விரோதமானது. உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது. சுற்றுச் சூழல் துறை மேகதாது அணை விவகாரத்தை நீக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னையில் நடந்து வரும் வடிகால்கள் மேம்படுத்தும் பணிகள் மழை காலத்திற்குள் முடிந்து விடும்.
முதல்வர் ஸ்டாலின் வரும் 28 ம் தேதி திருப்பத்துார், வேலுாரில் நடக்கும் விழாக்கள், 29ம் தேதி ராணிப்பேட்டையில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யஷ்வந்த் சிங்காவை தி.மு.க., ஆதரிக்கிறது. சமூக நீதியில் ஈடுபாடு உள்ள கட்சி தி.மு.க.,. பார்லிமென்டில் இரண்டாவது பெரிய கட்சி. ஆனால் பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார்கள். எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.