பன்னீர்செல்வம் பழனிசாமி அணியினர் இடையே...வார்த்தைப் போர்! கட்சி நாளிதழில் இருந்து பன்னீர் பெயர் அதிரடி நீக்கம் | Dinamalar

பன்னீர்செல்வம் பழனிசாமி அணியினர் இடையே...வார்த்தைப் போர்! கட்சி நாளிதழில் இருந்து பன்னீர் பெயர் அதிரடி நீக்கம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 26, 2022 | கருத்துகள் (9) | |
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதன் உச்சக்கட்டமாக, முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. ஒருவர் மீது ஒருவர், அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் கூறி, வசைபாடுவது அதிகரித்துள்ளது. 'அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுடன், பன்னீர்செல்வம் ரகசியமாக பேசியது ஏன்?' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார்
பன்னீர்செல்வம் பழனிசாமி அணியினர் இடையே...வார்த்தைப் போர்! கட்சி நாளிதழில் இருந்து பன்னீர் பெயர் அதிரடி நீக்கம்

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதன் உச்சக்கட்டமாக, முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. ஒருவர் மீது ஒருவர், அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் கூறி, வசைபாடுவது அதிகரித்துள்ளது. 'அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுடன், பன்னீர்செல்வம் ரகசியமாக பேசியது ஏன்?' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கிடையில், கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பட்டியலில் இருந்து, பன்னீர்செல்வம் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை தொடர்பாக, பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இம்மாதம் 23ம் தேதி நடந்த கட்சி பொதுக்குழு கூட்டத்தில், '23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்; அடுத்த பொதுக்குழு கூட்டம், ஜூலை 11ல் நடைபெறும்' என, பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், 'புதிய பொதுக்குழு கூடும் என அறிவித்தது செல்லாது; அ.தி.மு.க., அழிவுப் பாதையில் செல்கிறது' என, பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி பொதுக்குழுவை கூட்டி, ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற பழனிசாமியும், பொதுக்குழு கூடுவதை தடுக்க பன்னீர்செல்வமும் தயாராகி வருகின்றனர். இருவரும் தனித்தனியே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், இருவரின் ஆதரவாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி, எதிர் தரப்பினரை வசைபாடுவது அதிகரித்துள்ளது. இதனால், நடுநிலை வகிக்கும் கட்சித் தொண்டர்கள், இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கின்றனர்.


பன்னீர் 'புது குண்டு'


இந்நிலையில், சென்னையில் இருந்து விமானத்தில் பன்னீர்செல்வம் மதுரை சென்றார். விமான நிலையத்தில், அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவின் உயிர் தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்; தொண்டர்களுக்காக நான் உள்ளேன். இரு பெரும் தலைவர்கள் மனிதாபிமானத்தோடு, 50 ஆண்டுகள் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று நல்லாட்சி நடத்தினர்.ஆனால், தற்போது கட்சியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இது யாரால், எப்படி ஏற்பட்டது; யாரால் இந்த சதி வலை பின்னப்பட்டது என்பது குறித்து விரைவில் மக்கள் அறிந்து, அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவர். அவர்கள் செய்த தவறுக்கு, தொண்டர்கள் உரிய பாடம் கற்பிப்பர்; தண்டனை வழங்குவர்.ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்து, என்னை யாராலும் நீக்க முடியாது. 2002ல் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா அளித்த பேட்டியில், 'பன்னீர்செல்வம் போன்ற ஒரு துாய தொண்டனை பெற்றது என் பாக்கியம்' என, சான்றிதழ் கொடுத்தார். இதை தவிர வேறு எந்த சான்றிதழும் எனக்கு தேவையில்லை. என் எதிர்காலத்தை அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


தினகரனுடன் பேச்சு ஏன்?

இந்நிலையில், பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரையில் அளித்த பேட்டி: அ.தி.மு.க.,வில் தற்போதைய இரட்டை தலைமையால், வேட்பாளர் பட்டியலை கூட கடைசி நேரத்தில் வெளியிடும் அளவுக்கு குழப்ப நிலை உருவாகிறது. எனவே, வரும் தேர்தலை எதிர்கொள்ள, ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என, 95 சதவீதம் தொண்டர்கள் கருதுகின்றனர்.
'பன்னீர்செல்வம், தொண்டர்களை கண்டு கொள்ளவில்லை; அவர்களை கை விட்டார். அவரது குடும்ப நலனில் தான் அதிக அக்கறை செலுத்தினார்' என்பதை, 'பன்னீர்செல்வம் வீழ்ந்தது ஏன்' என, 'தினமலர்' நாளிதழ் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. சட்டசபையில், 'கருணாநிதியின் பராசக்தி வசனத்தை, எப்போதும் கையில் வைத்து படிப்பேன்' எனக்கூறி அ.தி.மு.க.,வை அடமானம் வைக்கிறார். அவரது மகன் ரவீந்திரநாத், ஸ்டாலினை சந்தித்து, 'தி.மு.க., ஆட்சி சிறப்பாக நடக்கிறது' என்கிறார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரனுடன் எதற்காக ரகசிய பேச்சு நடத்துகின்றனர். பொதுக் குழுவில் தொண்டர்களுக்கு ஏற்பட்ட மனக் குமுறலை வைத்து, பன்னீர்செல்வம் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். ஒற்றைத் தலைமைக்கு பச்சைக் கொடி காட்டவில்லை என்றால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அ.தி.மு.க.,வை எதிர்த்தவர்கள், வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை; அந்த நிலை பன்னீர்செல்வத்திற்கும் வரும். ஸ்டாலினுடன் மோத பழனிசாமியே பொருத்தமானவர்; வில்லன் பன்னீர் செல்வத்தால் முடியாது.
பழனிசாமி, கட்சியில் உழைப்பவர்களை உயர்த்தி வருகிறார். கட்சியில் எல்லா உச்சபட்ச நிலையை பன்னீர்செல்வம் பெற்றுள்ளார். அவரது உயரத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. அது, ஜெயலலிதா கொடுத்த பரிசு. பழனிசாமி தலைமையை ஏற்று, பொதுக்குழுவில் அவரது பெயரை பன்னீர்செல்வம் முன்மொழிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


பொதுக்குழு நடக்காது!

பன்னீர்செல்வத்திற்கு உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தஞ்சாவூரில், அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தனியாக ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலர்கள், ஒன்றிய செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லும் முன், காலை, 6:00 மணிக்கே, பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத, 600 பேர் மேடை முன் அமர வைக்கப்பட்டனர்; அவர்கள் தான் கூச்சல் போட்டனர்.
கட்சியின் ஜனநாயகத்திற்கு புறம்பாக, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தினர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை எதிர்ப்பதாக கூறி, நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.பழனிசாமி பக்கம் சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள், தற்போது எங்கள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். வரும், 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறாது.
ஏற்கனவே நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின், தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


நீக்கப்படுகிறார்?

இப்படி பன்னீர், பழனிசாமி அணியினர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறி வசை பாடி வரும் நிலையில், அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில் இருந்து, பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக, 'நமது எம்.ஜி.ஆர்.,' வெளிவந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா தரப்பினர் அப்பத்திரிகையை நடத்தி வருகின்றனர். அதில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனுக்கு ஆதரவாக செய்திகள் வருகின்றன.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்ற பின், கட்சியின் நாளிதழாக, 'நமது அம்மா' என்ற பத்திரிகை துவக்கப் பட்டது. இதன் முதல் பக்கத்தில், நிறுவனர்கள் என குறிப்பிட்டு, பன்னீர்செல்வம், பழனிசாமி பெயர்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தன.
கடந்த, 23ம் தேதி நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, பன்னீர்செல்வம் தரப்பினரின் நிகழ்வுகள் எதுவும் அப்பத்திரிகையில் வெளியிடப்படவில்லை. அடுத்த அதிரடியாக, நிறுவனர் பெயரில் இடம் பெற்றிருந்த பன்னீர்செல்வம் பெயர், அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த மாதம் நடைபெற உள்ள கட்சி பொதுக்குழுவில், பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கூண்டோடு நீக்குவதற்கான அச்சாரம் என்று கூறப்படுகிறது.

நாளை தலைமை அலுவலகம் செல்கிறார்


தேனி சென்றுள்ள பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களை இன்று சந்தித்து பேசிய பின், சென்னை திரும்புகிறார். நாளை அமாவாசை என்பதால், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சென்று, கட்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இரட்டை தலைமை பதவி காலாவதியாகி விட்டதாக பழனிசாமி தரப்பு அறிவித்தாலும், பொருளாளர் என்ற அடிப்படையில், தலைமை அலுவலகத்திற்குள் அவர் நுழைய தடை விதிக்க முடியாது.
ஆனால், பன்னீர்செல்வம் அலுவலகத்திற்குள் நுழையும் போது, பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப தொண்டர்களை வரவழைக்கும் பொறுப்பு, மூத்த மாவட்ட செயலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில், 'வாழ்க' கோஷம் எழுப்பும் பட்சத்தில், மோதல்கள் அரங்கேறலாம் என, கட்சி தொண்டர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே, 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தொண்டர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.அ.தி.மு.க.,வில் நடப்பதுஉரிமைக்கான போராட்டம்


''அ.தி.மு.க.,வில் நடப்பது உரிமைக்கான போராட்டம்; ஜாதி, மதத்தின் பெயரை சொல்லி கட்சியை யாராலும் பிரிக்க முடியாது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:அ.தி.மு.க.,வை லட்சியத்திற்காக எம்.ஜி.ஆர்., துவக்கினார். தி.மு.க., மிரட்டலால், அ.தி.மு.க., வளர்ச்சி குறித்து நாளிதழ்கள் எழுத தயங்கிய காலத்தில், 'தினமலர்' துணிந்து எழுதியது. எம்.ஜி.ஆர்., எழுதிய உயிலில், 'தமிழர்கள் இருக்கும் வரை கட்சி இருக்க வேண்டும். 80 சதவீதம் தொண்டர்கள் யாரை ஆதரிக்கின்றனரோ, அவர்களுக்கே கட்சி பாத்தியப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
'எனக்கு பின்னாலும், 100 ஆண்டுகள் கட்சி இருக்கும்' என, ஜெயலலிதா கூறினார். தற்போது, கட்சியில் நடப்பது உரிமைக்கான போராட்டம்; பிளவு ஏதும் ஏற்படவில்லை. ஜாதி, மதத்தை கூறி கட்சியை பிரிக்க முடியாது. அ.தி.மு.க., ஜாதி மதத்திற்கு இடம் தராத கட்சி.
ஒரு நாயரும், பிராமணரும் இக்கட்சியின் தலைவராக இருந்துள்ளனர். பிராமண பெண்ணான ஜெயலலிதா தான், 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.எனவே எத்தனை சூழ்நிலை வந்தாலும், மீண்டும் அ.தி.மு.க., புத்துயிர் பெரும். இக்கட்சி தொண்டர்கள் எந்த கட்சிக்கும் போய்விட மாட்டார்கள்.இவ்வாறு ராஜு கூறினார்.

- நமது நிருபர் குழு -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X