வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோத்பூர்,-திருமண கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சிகள், மாப்பிள்ளைக்கு குதிரை சவாரி உள்ளிட்ட பல்வேறு ஆடம்பரங்களுக்கு தடை விதித்து, ராஜஸ்தானில் இரண்டு ஜாதி அமைப்புகள் விதிமுறைகள் வகுத்து உள்ளன.
மரியாதை
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாலி மாவட்டத்தைச் சேர்ந்த குமாவத் மற்றும் ஜாட் இன மக்கள் ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், திருமணங்களில் பின்பற்றப்படும் பல்வேறு ஆடம்பரங்களுக்கு தடைவிதித்து இந்த இரு சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இது தொடர்பான குமாவத் மற்றும் ஜாட் இன தலைவர்கள் கூறியதாவது:திருமணம் என்பது புனிதமான நிகழ்வு. இதில் மாப்பிள்ளையை மன்னரைப் போல கருத வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வில் மாப்பிள்ளை தாடி வைத்திருப்பது திருமணத்தின் மீதான மரியாதையை குலைக்கிறது. எனவே, இனி மாப்பிள்ளை திருமணத்தின் போது தாடி வைக்கக் கூடாது. சவரம் செய்த முகத்துடன் இருக்க வேண்டும். இசை நிகழ்ச்சிகள், அலங்காரங்கள், வாண வேடிக்கை, குதிரை சவாரி போன்றவற்றுக்கு அதிக தொகை செலவு செய்யப்படுகிறது. வசதி இல்லாதவர்கள் கூட கடன் வாங்கி இதை செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இந்த ஆடம்பர செலவு களுக்கு இனி தடை விதிக்கப்படுகிறது.
விதிமுறை
நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகள் வழங்குவதற்கும் கட்டுப் பாடு விதிக்கப்படும். 'ஓபியம்' போன்ற போதை பொருட்களை வழங்கும் சம்பிரதாயங்களை விலக்கிக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் ஒரே மாதிரி எளிமையான முறையில் திருமணம் நடத்த வேண்டும். திருமணத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத ஒரே நிலையை ஏற்படுத்தவே இந்த விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாலி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் குமாவத் மற்றும் ஜாட் இன மக்கள் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறுவோருக்கு தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.