வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-'போக்குவரத்து, 'சிக்னலில்' பிச்சை எடுக்கும் சிறுவர்கள் வாயிலாக, 'பாஸ்ட் டேக்'கில் இருந்து பணம் திருடப்படுவதாக பரவிய தகவலில் உண்மை இல்லை' என, பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ., விளக்கம் அளித்துள்ளன.
![]()
|
'ஸ்மார்ட்' கைக்கடிகாரம்
சுங்கச் சாவடிகளில், 'டிஜிட்டல்' முறையில் பணம் செலுத்தும், 'பாஸ்ட் டேக்' முறை கடந்த ஆண்டு அறிமுகமானது. வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள, 'டிஜிட்டல் ஸ்டிக்கர்' வாயிலாக, ஓட்டுனர் கணக்கில் இருந்து அரசின் கணக்குக்கு சுங்க கட்டணம் சென்று சேர்கிறது. இந்த, பாஸ்ட் டேக் நடைமுறையில் மோசடி கும்பல் புகுந்து பணம் திருடுவதாக, சமூக வலைதளங்களில், 'வீடியோ' பரவியது.அதில், சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவன் கையில், 'ஸ்மார்ட்' கைக்கடிகாரம் அணிந்துள்ளான். அவன், சிக்னலில் நிற்கும் கார்களின் கண்ணாடியை துடைத்துவிட்டு பணம் பெறுகிறான். கண்ணாடியை துடைக்கும்போது, அவன் கையில் உள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம் வாயிலாக, பாஸ்ட் டேகை, 'ஸ்கேன்' செய்து நுாதன முறையில் பணம் திருடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
![]()
|
இந்த திருட்டில் மிகப் பெரிய கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது. இது முற்றிலும் தவறான தகவல் என, மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணப்பரிமாற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அந்த வீடியோ போலியானது. அதில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடுவதை போல, ஸ்மார்ட் கைக்கடிகாரம் வாயிலாக பாஸ்ட் டேக் பணத்தை திருட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிகர்கள் வாயிலாக மட்டுமே பணத்தை பெற முடியும். பல்வேறு சுற்று பரிசோதனைகளுக்கு பின்னரே பாஸ்ட் டேக் உருவாக்கப்பட்டது. எனவே அது மிகவும் பாதுகாப்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement