பெரம்பலுார்-ஆதரவற்ற 80 வயது மூதாட்டிக்கு, பெரம்பலுார் அரசு மருத்துவமனை பெண் ஊழியர், மனித நேயத்துடன் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, 80 வயது பெண், ஆதரவற்ற நிலையில் படுத்தே கிடக்கிறார்.அழுக்கடைந்த நைட்டியுடன், போர்வையை போர்த்தியபடி எழுந்திருக்க முடியாமல் படுத்தே கிடக்கும் அவர், 'வலிக்குது, வலிக்குது' என கூக்குரலிடுகிறார்.
சக்கர நாற்காலி
அங்கு வரும் நோயாளிகளும், பார்வையாளர்களும், பொதுமக்களும் மூதாட்டியின் நிலையை பார்த்து, அனுதாபத்தை மட்டும் வெளிப்படுத்தி கடந்து சென்று கொண்டிருந்தனர்.பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மகாலட்சுமி, 40, என்ற பெண் ஊழியர், அந்த மூதாட்டியை துாக்கி, சாப்பிட வைத்தார். சாப்பிட்டு முடித்த மூதாட்டி, 'மலம் கழிக்க வேண்டும்' என்றார்.சற்றும் தாமதிக்காத மகாலட்சுமி ஓடோடி சென்று, சக்கர நாற்காலி வண்டியை எடுத்து வந்து, மூதாட்டியை தானே துாக்கி, வண்டியில் வைத்து, கழிப்பறைக்கு அழைத்து சென்றார்.அதன் பின், மூதாட்டியை கழுவி சுத்தம் செய்து, மீண்டும் அதே இடத்திற்கு துாக்கி வந்து படுக்க வைத்து விட்டுச் சென்றார்.மூதாட்டியிடம் விசாரித்த போது, வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி சிந்தாமணி என்பதும், உடல் நலம் குன்றியதால், பேரன் மாரிமுத்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்றதும் தெரிய வந்தது.
பொதுவான கருத்து
இது குறித்து, மகாலட்சுமி கூறியதாவது:அந்த மூதாட்டியை, கடந்த ஒரு மாதத்துக்கு முன், அவரது குடும்பத்தினர், மருத்துவமனையில் சேர்த்து விட்டுச் சென்றனர். அதன் பின், அவர்கள் வரவே இல்லை. அதனால், நானே மூதாட்டியை பராமரித்து வருகிறேன். அவரை, குடும்பத்தினரிடம் சேர்க்க உதவுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு மருத்துவமனை ஊழியர்கள் என்றால், 'எதற்கெடுத்தாலும் பணம் கேட்பர்; எரிந்து எரிந்து விழுவர்' என்பது தான் பொதுவான கருத்து.ஆனால், மனித நேயம் மிக்க ஊழியர்களும் இருக்கத் தான் செய்கின்றனர், என்பதை மகாலட்சுமி நிரூபித்து வருகிறார்.அவரை பாராட்டவும், மூதாட்டிக்கு உதவவும் 63818-77184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.