வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வால்பாறை: யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை மீட்க, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்காமல், வனத்துறையினர் ஏதாவது சாக்குப்போக்கு கூறிக்கொண்டுள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில், யானைகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக யானைகள் நடந்து செல்லும் பாதை அழிக்கப்பட்டதால், சமீப காலமாக, வனவிலங்கு - மனித மோதல் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் யானைகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
யானைகள் நடமாட்டம் குறித்து, மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக யானைகள் நடமாடும் பகுதியில் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சிகப்பு விளக்கு எரியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் குறித்து வால்பாறை மக்களுக்கு மொபைல்போன் வாயிலாக குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. இதனால், சமீப காலமாக யானைகளால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
இதனிடையே, வால்பாறையில் உள்ள பெரும்பாலான எஸ்டேட்களில் யானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. எஸ்டேட் பகுதியில் விதிமுறைக்கு புறம்பாக யானைகள் வழித்தடத்தில் தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முறையாக அனுமதியும் பெறவில்லை.
இதுகுறித்து, தமிழக அரசு தனிக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், வால்பாறையை மறுசர்வே செய்து, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வனப்பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும், நிபந்தனை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ள எஸ்டேட் நிலத்தில், யானைகளின் வழித்தடங்களை மறித்து கட்டுமானம் கட்டியும், தேயிலை பயிரிட்டும் உள்ளது, அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், விதிமீறலை தடுத்து, வன நிலத்தை மீட்காமல், வனத்துறையினர் ஏதாவது சாக்குப்போக்கு கூறிக்கொண்டிருக்கின்றனர்.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், இயற்கை வளம் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் வனத்துறை ஆதரவோடு மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன.
யானைகள் உணவு மற்றும் நீர்தேவைக்காக இடம் பெயர்ந்து செல்லும் வழித்தடங்களை மீட்டால் தான், வனவிலங்கு - மனித மோதலை தடுக்க முடியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி யானைகள் வழித்தடங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வால்பாறையில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க முடியும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
வால்பாறையில் முகாமிடுவது ஏன்?
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறையில் தான் யானைகள் அதிக அளவில் உள்ளன. இங்கு யானைகளுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் பாதுகாப்பான வனப்பரப்பு உள்ளதால், வால்பாறையில் உள்ள வனப்பகுதியிலேயே நிரந்தரமாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, கோடை காலத்தில் கூட வன வளம் பசுமையாக இருப்பதால், யானைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. யானைகளால் தான், மலைப்பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படுகின்றன. யானைகள் வாழ்விடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
இந்த இடங்களை மீட்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதியளித்து, வருவாய்த்துறையினர் சர்வே செய்து, வன எல்லையை உறுதி செய்தால், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.