
காசிமேடு
எவ்வளவோ மீன்கள் விற்பனையாகும் இடங்கள் இருந்தாலும் காசிமேடு அளவிற்கு எந்த இடமும் பிரபலமாகவில்லை
காரணம் இங்கு குவியும் கூட்டம்தான்

குறைந்த விலை ப்ரஷ்ஷான மீன்கள் என்பதுதான் இதற்கு காரணம்,குறைந்த விலை என்பது மீன்களின் வரத்தை பொறுத்து நிர்ணயிம் செய்யப்படுவது ஆகவே இந்த வார விலை அடுத்த வாரம் இருக்காது கடந்த வாரம் விலை இந்த வாரம் இருக்காது இங்கே வாங்கிச் சென்றுதான் பல இடங்களில் வியாபாரம் செய்கின்றனர் என்பதால் வியாபாரிகள் வாங்கும் விலைக்கே நாமும் வாங்கலாம் என்றுதான் மக்கள் வண்டிகட்டிக்கொண்டு வருகின்றனர் ஆனால் அவர்களுக்கு உள்ள ஏலம் எடுக்கும் சமார்த்தியம் பொதுமக்களுக்கு வராது.

அதே போல கடலில் பிடித்து நான்கு நாட்களாக ஐஸ்கட்டியில் வைத்து பின்னரே கரைக்கு கொண்டுவந்து விற்கின்றனர், ஆகவே ப்ரஷ்ஷான மீன் என்பதும் அவ்வளவு நிஜம் இல்லை,கிராமங்களில் கிணறு கண்மாய்களில் பிடிக்கப்படும் விரால் இன மீன்களை உயிருடன் கிராமங்களில் விற்பனை செய்வர். அதுதான் ப்ரஷ்ஷான மீன் அந்த விரால் மீனை வீட்டிற்கு கொண்டுபோய் சாம்பலில் தேய்த்து கொன்று துண்டு போட்டால் கூட கூட அதன் துண்டுகள் துள்ளும்.

கூட்டம் காரணமாக இடிபாடுகளில் சிக்காமல் மீன் வாங்கமுடியாது,அதே போல சேற்றில் மீன் கழிவுகளில் மிதிக்காமல் மீன் வாங்க முடியாது, பேரம் பேசத்தெரியவேண்டும். இதெற்கெல்லாம் தயாராயிருப்பவர்கள் இங்கு வந்து மீன் வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால் இந்த காசிமேடு துறைமுகத்தில் மீன் பிடிப்பவர்கள் விற்பவர்கள் என்று அன்றாடம் ஆயிரக்கணக்கான பேர் பிழைத்து வருகின்றனர் என்பது நல்ல விஷயம்.

இடத்தை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொண்டால் இன்னும் பலர் வருவர்.
-எல்.முருகராஜ்.