நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: நான் இத்தனை ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படித்தான் எல்லாரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'எல்லாரும்மது அருந்தாம இருங்க... அதான், உடம்புக்கு, நாட்டுக்கு, வீட்டுக்கு நல்லது'ன்னு சிம்பிளா சொல்லியிருக்கலாமே... அதை விட்டுட்டு, 'எம்.எல்.ஏ.,வா இருந்தும்,மது அருந்தலை'ன்னு சொன்னா எப்படி...? அப்படின்னா, மத்த எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், 'நல்லா ஏத்திக்கிறாங்க' என்று அர்த்தம் வருதே... நல்லா யோசிச்சு தான் பேசினீங்களான்னு, 'டவுட்' எழுது!
தமிழக பொது சுகாதாரத் துறை அறிவிப்பு: தமிழகத்தின் நகர்ப்புறங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. எனவே, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள பொது சுகாதார சட்டம் -1934ன்படி அபராதம் விதிக்கப்படும்.
டவுட் தனபாலு: பொதுமக்கள் ஒத்துழைத்தால், கொரோனா தொற்றை விரட்ட முடியும் என்பதில் மாற்று கருத்தே இல்லை... அதே நேரம், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எப்படி காத்துல பறக்க விட்டாங்களோ, அந்த மாதிரி, முக கவசம் அபராதம் விஷயத்தையும் கண்டுக்காம இருந்துடுவீங்களோ என்பது தான் எங்க, 'டவுட்!'
பத்திரிகை செய்தி: சென்னையில், பழைய மாமல்லபுரம் சாலை எனும் ஓ.எம்.ஆர்., சாலை சுங்கச்சாவடியில், ஜூலை 1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 33 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. சரக்கு வாகனங்களுக்கு, 49ல் இருந்து, 54; பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கு, 78ல் இருந்து, 86 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு: சேதமான சாலைகளை செப்பனிடுறாங்களோ, இல்லையோ... சுங்க கட்டணத்தை மட்டும் வருஷா வருஷம் கரெக்டா ஏத்திடுறாங்க... அது இருக்கட்டும்... ஏத்துறது தான் ஏத்துறாங்க... 5, 10ன்னு ரவுண்டா ஏத்தாம, அதென்ன, 3, 8ன்னு ஏத்துறாங்கன்னு தான், 'டவுட்'டா இருக்குது!