சென்னை, :தமிழக சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா வழிகாட்டிகளின் திறன் மேம்பாட்டிற்கான, மூன்று நாள் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று துவங்கியது.நம் நாட்டில் முதன்முறையாக நடக்கும், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனையர் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.அவர்களுக்கு சிறந்த சேவையாற்றும் வகையிலும், சுற்றுலா வழிகாட்டிகளின் திறனை மேம்படுத்தும் வகையிலும், மூன்று நாள் சுற்றுலா வழிகாட்டி பயிற்சி, சென்னையில் நேற்று துவங்கியது. இந்த வழிகாட்டி பயிற்சியை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்து பேசியதாவது:மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், சர்வதேச அளவில், 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.இந்த போட்டி முடிந்த பின், பங்கேற்பாளர்கள் மாமல்லபுரம் சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட செல்வர்.அவர்களுக்கு, தமிழக சுற்றுலாவின் பெருமைகளை விளக்கும் வகையில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. சட்டசபை மானியக் கோரிக்கையில், சுற்றுலா வழிகாட்டிகளுக்காக, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதன் துவக்கமாக இந்த பயிற்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படும் தினசரி திருமலை திருப்பதி ஆன்மிக சுற்றுலாவிற்கு, 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.தற்போது, திருப்பதி தேவஸ்தானத்துடன் பேச்சு நடத்தி, தினசரி, 1000 பேர் செல்லும் வகையில் அனுமதி பெறப்பட்டுள்ளது.தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதி ஆன்மிக சுற்றுலா செல்லும் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனர் சந்திப், நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.