வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கவுஹாத்தி,-கடந்த இரு வாரங்களாக கன மழை கொட்டிய அசாமின் பல இடங்களில் வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 126ஆக அதிகரித்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சமாக குறைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த இரு வாரங்களாக கன மழை கொட்டியது. இதனால் மாநிலத்தின் 28 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 25.10 லட்சமாக இருந்தது. அது, நேற்று 22.21 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.
கச்சார் மாவட்டம் சில்சார் நகரம் ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கு, மக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மற்ற பகுதிகளில் வெள்ளம் வடியத் துவங்கியுள்ளது. மாநிலம் முழுதும், 2.17 லட்சம் பேர் மீட்கப்பட்டு 564 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதிலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விமானப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.