வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசிக்கும், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து பிகாஷ் சாகா என்பவர் திரிபுரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இது தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்றம், முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும், பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பர்திவாலா அமர்வில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று வாதிட்டதாவது:முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய அரசின் முடிவு குறித்து விசாரிக்க திரிபுரா உயர் நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தொடர்பாக இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. அதனால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதை ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை இன்று விசாரிப்பதாக கூறியுள்ளது.