கொச்சி,- நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு நேற்று கைது செய்யப்பட்டார்.
மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். அதில் நடிக்க புதுமுக நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்திருந்தார்.இந்நிலையில், அந்த நடிகை கடந்த ஏப்ரலில் சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தயாரிப்பாளர் விஜய் பாபு தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், பல முறை பலாத்காரம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், இதுபற்றி போலீசிலும் புகார் செய்தார். இதுகுறித்து கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றம், 22ம் தேதி விஜய் பாபுவுக்கு முன் ஜாமின் அளித்தது. இதற்கிடையே, கொச்சி போலீசார் விஜய்பாபுவை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் விஜய் பாபுவை கைது செய்துள்ளோம். 'உயர் நீதிமன்ற நிபந்தனைப்படி, இரு நபர்கள் தலா 5 லட்சம் ரூபாய் ஜாமின் தொகை செலுத்தினால், அவர் ஜாமினில் விடுவிக்கப்படுவார். இருப்பினும், வழக்கு விசாரணைக்காக வரும் 3ம் தேதி வரை அவர் போலீஸ் காவலில் இருப்பார்' என்றனர்.