வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-சென்னை மற்றும் புறநகர் குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் விலையில் சதுர அடிக்கு 1,000 ரூபாய் வரை குறைத்து சலுகை வழங்க, 50க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளன
.சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வீடு, மனை விற்பனை தொய்வு நிலையில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இருப்பினும் புதிய திட்டங்களை அறிவிப்பதைவிட, ஏற்கனவே துவங்கிய திட்டங்களில் நிலுவையில் உள்ள வீடு, மனைகளை விற்பதிலேயே, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.இதனால், 2022 முதல் ஐந்து மாதங்களில் புதிய குடியிருப்பு, மனைப்பிரிவு திட்டங்களை அறிவிப்பதில் தொய்வு நிலை காணப்படுகிறது.
பழைய திட்டங்களில் உள்ள வீடு, மனைகளை விற்பதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.சந்தை நிலவரப்படி வீடு, மனையின் விலை படிப்படியாக உயர்வது வழக்கம். ஆனால், கொரோனாவுக்கு பின் இந்த விலை உயர்வு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:சென்னையிலும், புறநகர் பகுதியிலும் ஆறு மாதங்களில் எதிர்பார்த்த அளவுக்கு நிலத்தின் விலை உயரவில்லை. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விலையில் சலுகைகள் வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தாம்பரம் அருகில் பிரபல கட்டுமான நிறுவனத்தின் திட்டத்தில், 2021 நவம்பரில், ஒரு சதுர அடி நிலத்தின் விலை 6,560 ரூபாய் என குறிப்பிடப்பட்டது. இந்நிறுவனம் தற்போது, அதே திட்டத்தில் மனைகளை ஒரு சதுர அடி, 5,560 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்து உள்ளது.ஆறு மாதங்களில் சதுர அடிக்கு, 1,000 ரூபாய் குறைத்து, அந்நிறுவனம் சலுகையாக அறிவித்து உள்ளது. இப்படி, விலை குறைப்பு சலுகைகள் வழங்கியாவது மனைகளை விற்றாக வேண்டிய கட்டாய நிலை, ரியஸ் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது
.தற்போதைய நிலவரப்படி, பெரிய அளவிலான, 50க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் சதுர அடிக்கு 1,000 ரூபாய் வரை விலை குறைப்பு சலுகையை வழங்க முன்வந்துள்ளன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.