வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை, ஜூன் 28- அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின், முன்னாள் அமைச்சர்கள் அளித்த பேட்டி:
ஜெயகுமார்: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இழந்து விட்டனர். கட்சியை வழி நடத்துவது யார் என்பதை விவாதிக்க, நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மொத்தம் உள்ள 74 நிர்வாகிகளில், 65 பேர் பங்கேற்றனர். நான்கு பேர் கடிதம் கொடுத்துள்ளனர்; ஐந்து பேர் மட்டும் வரவில்லை. அடுத்த மாதம் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு அழைப்பிதழ்களை, தபால் வழியாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாத சூழலில், கட்சியை வழிநடத்த, தலைமை நிர்வாகிகள் அதிகாரம் படைத்தவர்கள். துரோகத்தின் அடையாளம் பன்னீர்செல்வம். ஆரம்ப கால கட்டத்தில் இருந்து, தான் சார்ந்துள்ள கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்.
அவர் செய்த துரோகத்தை, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பட்டியலிட்டு, பேட்டி அளித்துள்ளார். அனைத்து கேள்விகளுக்கும், 11ம் தேதி பொதுக்குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்படும். ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த விஷயங்கள் மட்டுமின்றி, அவரது துரோகத்துக்கு நிறைய உதாரணங்கள் கூற முடியும்.பொருளாளர் பதவியில் பன்னீர்செல்வம் நீடிப்பாரா என்பதை, பொதுக்குழு முடிவு செய்யும். யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை. ஒற்றைத் தலைமையாக, பழனிசாமி பொறுப்பேற்கும் நிலை உள்ளது.
வைகைச்செல்வன்: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை உறுதியாகி விட்டது. இந்தியாவில் எந்த கட்சியிலும், 'லெட்டர் பேடு' கட்சியில் கூட, இரட்டைத் தலைமை கிடையாது.வலுவான இயக்கமான அ.தி.மு.க., மேலும் வலிமை பெற, ஒற்றைத் தலைமை தேவை.ஒரு தலைவர் வேகமாகவும், ஒரு தலைவர் மெதுவாகவும் செயல்படுவதால், விரைவாக முடிவு எடுக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலை மாற ஒற்றைத் தலைமை தேவை. ஒற்றைத் தலைமைக்கு பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என, அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.தி.மு.க.,வை எதிர்த்து வலிமையோடு செயல்பட வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்கள் மீது எத்தனையோ வழக்கு போடப்பட்ட போதும், தி.மு.க.,வை கடுமையாக எதிர்த்தனர். அந்த வழியில் சிறந்த முறையில் செயலாற்றக் கூடியவராக பழனிசாமி இருப்பார் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எனவே வரும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உறுதி செய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.