ஐநுாறு ரூபா 'ஜிபே' அனுப்பச்சொல்றாரு போலீசு: போலி டீன் ஆட்டத்துக்கு பின்னாடி லேடி ஆபீசரு

Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
உடல்நிலை சரியில்லை என்று வீட்டிலிருந்த மித்ராவைப் பார்க்க வந்த சித்ரா, ''மித்து! நம்ம ஊர்ல மறுபடியும் கொரோனா கணக்கு ஏறிட்டே இருக்கு. மூணு நாளைக்கு முன்னாடியே, நுாறைத் தாண்டிருச்சு. நம்மதான் ஜாக்கிரதையா இருக்கணும்...உனக்கு அந்த மாதிரி 'சிம்டம்' எதுவும் இல்லையே!'' என்று கேட்டாள்.அவளை வரவேற்ற மித்ரா, ''அந்த மாதிரி ஒண்ணுமில்லைக்கா...ஆனா ரெண்டு நாளைக்கு வெளிய போக
ஐநுாறு ரூபா 'ஜிபே' அனுப்பச்சொல்றாரு போலீசு: போலி டீன் ஆட்டத்துக்கு பின்னாடி லேடி ஆபீசரு

உடல்நிலை சரியில்லை என்று வீட்டிலிருந்த மித்ராவைப் பார்க்க வந்த சித்ரா, ''மித்து! நம்ம ஊர்ல மறுபடியும் கொரோனா கணக்கு ஏறிட்டே இருக்கு. மூணு நாளைக்கு முன்னாடியே, நுாறைத் தாண்டிருச்சு. நம்மதான் ஜாக்கிரதையா இருக்கணும்...உனக்கு அந்த மாதிரி 'சிம்டம்' எதுவும் இல்லையே!'' என்று கேட்டாள்.

அவளை வரவேற்ற மித்ரா, ''அந்த மாதிரி ஒண்ணுமில்லைக்கா...ஆனா ரெண்டு நாளைக்கு வெளிய போக வேணாம்னு பாக்குறேன்!'' என்று பதில் சொல்லி விட்டு, ''நீங்க சொல்றது மாதிரி, கொரோனா அதிகமாயிட்டுதான் இருக்கு. தினமும் 1800லயிருந்து ரெண்டாயிரம் பேருக்கு பரிசோதனை பண்றதா கணக்குக் காமிக்கிறாங்க. ஆனா உண்மையா அவ்ளோ பரிசோதனை நடக்குறதில்லைன்னு சொல்றாங்க!'' என்றாள்.''இப்பிடி அசால்ட்டா இருந்தாங்கன்னா, நாலாவது அலையிலயும் நம்ம ஊருதான் முதலிடத்துக்கு வரும். நம்ம ஜி.எச்., இப்போ இருக்குற நிலைமையப் பார்த்தா, அடுத்த அலை வந்துச்சுன்னா, எப்பிடி சமாளிப்பாங்கன்னே தெரியலை!'' என்று சித்ரா வருத்தப்பட, குறுக்கிட்டு ''ஏன்க்கா அப்பிடி சொல்றீங்க?'' என்று கேட்டாள் மித்ரா.

அதற்கு விளக்கமளித்தாள் சித்ரா...''நீ சொல்றது கரெக்ட் மித்து! ஜி.எச்.,க்கு வர்ற பேஷன்ட்க நிலைமை, வரவர ரொம்ப பரிதாபமா போயிட்டு இருக்கு...போன வாரம் ஒரு சின்னப் பையனுக்கு ஆக்சிடெண்ட் ஆகி, காலையில ஜி.எச்.,கூப்பிட்டுப் போயிருக்காங்க. சாயங்காலம் வரைக்கும் அந்தப் பையன் கால்ல இருந்த ரத்தத்தைக் கூட துடைக்கலையாம். அதைத் துடைக்காமலே ஸ்கேன் எடுத்திருக்காங்க!''''அச்சச்சோ...அப்புறம்!''''பையனோட அப்பா, டாக்டர்கள்ட்ட போய்க் கேட்டதுக்கு, அவரைத் தாறுமாறா திட்டிருக்காங்க. வெறுத்துப் போன அவங்க, 'கடன் வாங்குனாலும் பரவாயில்லை. பையன் காலைக் காப்பாத்தணும்'னு சொல்லி, பிரைவேட் ஹாஸ்பிடலுக்குக் கூப்பிட்டுப் போயிட்டாங்களாம்!''

''டீன் இதையெல்லாம் விசாரிக்க மாட்டாங்களா...?''''அவுங்க விசாரிக்கிறாங்களா இல்லையான்னு தெரியாது,''.''நீ டீன் பத்திப் பேசுனதும், இ.எஸ்.ஐ., ஹாஸ்பிடல்ல டீனா இருக்குறதா பொய் சொல்லி, பல பேர்ட்ட வேலை வாங்கித்தர்றதா பல கோடி ரூபா மோசடி பண்ணுன தன்யாங்கிற லேடியோட ஞாபகம் வந்துச்சு. அவர் மேல சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கேசும், சிட்டி கிரைம் பிராஞ்ச்ல ஒரு கேசும் பதிவு பண்ணிருக்காங்க. ஆனா இப்ப வரைக்கும் அவரையோ, அவர் ஹஸ்பெண்டையோ கைது பண்ணலை!''''அந்தப் பொண்ணு வீட்டு முன்னால கூட, ராத்திரி பகலா ரெண்டு நாளு நிறையப்பேரு போராட்டம் நடத்துனாங்களே...அப்புறமும் ஏன் மித்து அரெஸ்ட் பண்ணாம இருக்காங்க?''ஆவேசமாய்க் கேள்வி கேட்ட சித்ராவுக்கு, விளக்கமளித்தாள் மித்ரா...

''போராட்டம் நடத்துனப்போ கூட, அந்தப் பொண்ணுக்குதான் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தாங்க. அரெஸ்ட் பண்ணலை...ஏன்னு விசாரிச்சா, அந்த மோசடி லேடிக்கு செய்தித்துறையில இருக்குற முக்கியமான ஒரு லேடி ஆபீசர், நெருங்குன சொந்தமாம். அவுங்கதான் தலையிட்டு அரெஸ்ட் பண்ண விடாம வச்சிருக்காங்கன்னு தகவல். புது போலீஸ் கமிஷனருக்கு இது தெரியுமான்னு தெரியலை!''''புதுசா வந்திருக்குற போலீஸ் கமிஷனர், எல்லாரையும் நல்லா விரட்டி வேலை வாங்குறாருன்னு கேள்விப்பட்டேன். யாரு என்ன புகார் கொடுத்தாலும், உடனே கேஸ் பைல் பண்ணனும்னு 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லிருக்காராம். நம்ம ஊர்ல டூ வீலர் திருட்டு நிறையா நடக்குது. ஆனா புகார் கொடுத்தா கேஸ் போடவே மாட்டாங்க. இப்போ சி.ஓ.பி., விரட்டுனதுக்கு அப்புறம் வேண்டா வெறுப்பா பைல் பண்றாங்க!''

''நீங்க இப்பிடி சொல்றீங்க...போத்தனுார் ஸ்டேஷன்ல இருக்குற போலீஸ்காரர் ஒருத்தரு, யாராவது புகார் கொடுத்தா, சி.எஸ்.ஆர்., கூட கொடுக்க மாட்டாராம். போன் நம்பரை வாங்கி வச்சுக்கிட்டு, 500 ரூபா பணம் அனுப்பச் சொல்லுவாராம். அதை கையில கொடுக்கணுமாம். இல்லைன்னா ஏதோ ஒரு நம்பர்ல 'ஜி பே' பண்ணச் சொல்றாராம். அதுல பணம் விழுந்துச்சுன்னு தெரிஞ்சா மட்டும்தான், சி.எஸ்.ஆர்., கொடுப்பாராம்!''''எப்பிடி இதுவரைக்கும் மாட்டாம இருக்காரு மித்து?''''அவர் எப்பிடி மாட்டலைன்னு தெரியலை...அவர்ட்ட மாட்டிக்கிட்டு மக்கள் மட்டுமில்லாம, ஸ்டேஷன்ல இருக்குற மத்த போலீஸ்காரங்களும் புலம்புறாங்க. டாஸ்மாக் கடை மூடுன பிறகு, இல்லீகலா விக்கிற சரக்குகளைப் பறிமுதல் பண்ணி ஸ்டேஷன்ல வச்சா, இவரு எல்லாத்தையும் காலி பண்ணிடுறாராம். கிட்டத்தட்ட 600 பாட்டிலை இவரும், இன்னும் ரெண்டு போலீசும் சேர்ந்து குடிச்சிருக்காங்க!

''பேசிக்கொண்டே, பிளாஸ்க்கில் இருந்த சுக்கு மல்லிக் காபியை இருவருக்கும் ஊற்றினாள் மித்ரா. அதை ரசித்து ருசித்த சித்ரா, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...''மித்து! விஜிலென்சோட மூவ்ல நம்ம கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் பல பேரு ஆடிப்போயிருக்காங்களாமே!''

''ஆமாக்கா...உண்மைதான். டிப்பர் லாரி, டிரைவர், கிளீனர் நியமிச்சத்துல, மாநகராட்சிக்கு 25.28 கோடி ரூபாய் இழப்புன்னு கண்டு பிடிச்சிருக்காங்க. இதுல, முன்னாள் கமிஷனர், முன்னாள் துணை கமிஷனர் எல்லாரையும் கேஸ்ல சேர்க்கப் போறாங்களாம். விஜிலென்ஸ் லெட்டர் லீக் ஆனதால, கவர்மென்ட்ல சீக்கிரமே கிரீன் சிக்னல் கிடைக்கும்னு, விஜிலென்ஸ் போலீஸ் நம்பிக்கையோட இருக்காங்க!''

''இதுக்கு அனுமதி கிடைச்சிட்டா, அடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர் முறைகேட்டுல ஏகப்பட்ட அதிகாரிகள் சிக்குவாங்கன்னு பேசிக்கிறாங்க,'' ''ஊழல் அதிகாரிகளை விட்டு வச்சா கவர்மென்ட் பேரு கெட போகுது...ஏற்கனவே இப்போ 'ஆபீசர்ஸ் ஆட்சி'தான் நடக்குதுன்னு, ஆளும்கட்சி கவுன்சிலர்களே குமுற ஆரம்பிச்சிட்டாங்க,''''அதென்னவோ உண்மைதான் மித்து...தொண்டாமுத்துார்ல எல்லா கட்சி வார்டு மெம்பர்களும், யூனியன் கவுன்சிலர்களும் கடுமையான அதிருப்தியில இருக்காங்க. உயரதிகாரி நடத்துன பயிற்சி வகுப்பை புறக்கணிச்சிட்டாங்க. சீக்கிரமே கலெக்டர்ட்ட பெட்டிஷன் கொடுக்கப் போறாங்க!''

''பெட்டிஷன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு. கூட்டுறவு துறை செகரட்டரி ராதாகிருஷ்ணன், நம்ம ஊருக்கு வந்து ஆய்வு பண்ணுனப்போ, ரேஷன் கடை ஊழியர் சங்கத்துக்காரங்க, அவரை நேர்ல பார்த்து பெட்டிஷன் கொடுத்திருக்காங்க. அதுக்கு அவரு, 'சென்னைக்கு வாங்க, விரிவாப் பேசுவோம். முடிஞ்சதை செய்றோம்'னு நல்லாப் பேசுனாராம். அவுங்க ரொம்பவே நம்பிக்கையோட இருக்காங்க!''''ஆவின் மினிஸ்டர், மதுக்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு நேர்ல போய், பால் தரத்தை சோதனை பண்ணிருக்காரு. அப்போ பால் உற்பத்தியாளர்கள்ட்ட 'பட்டுவாடா எல்லாம் சரியா நடக்குதா. வேற ஏதாவது உங்களுக்குத் தேவை இருக்கா'ன்னு கேட்ருக்காரு. யாருமே எதுவுமே கேக்கலையாம். உடனே, 'என்கிட்ட எதுவும் புகார் பண்ணக்கூடாது'ன்னு சொல்லிருக்காங்களான்னு கேட்டாராம்!''

''பரவாயில்லையே!'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்குள், குறுக்கிட்ட சித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...''அப்பவும் யாருமே எதுவும் கேட்கலையாம். கட்சிக்காரங்க சால்வை போட வந்ததுக்கு, கலெக்டருக்கும், ஆவின் எம்.டி.,க்கும் போடச் சொல்லிட்டு கிளம்பீட்டாராம்!''''அவர் பச்சாபாளையம் ஆவின் பேக்டரியில போய் இப்பிடிக் கேட்ருந்தார்னா, ஏகப்பட்ட கம்பிளைன்ட் குவிஞ்சிருக்கும். அங்க 'சக்தி' வாய்ந்த ஊழியர் ஒருத்தரு, துப்புரவு வேலை பாக்கிறவுங்களை வாய்க்கு வந்தபடி சாதிப்பேரைச் சொல்லித் திட்றாராம்!''''இதே மாதிரி முன்னாடியே ஒரு புகார் வந்ததா ஞாபகமிருக்கு!''

''இதுக்கு முந்துன ஜி.எம்., இருக்குறப்ப, இவர் மேலதான் இதே மாதிரி புகார் வந்து, ஆர்.எஸ்.புரத்துக்கு மாத்துனாங்க. புது ஜி.எம்.,வந்தவுடனே திரும்பவும் அங்கேயே வந்துட்டு, மறுபடியும் ஆட்டம் போடுறாராம். போன வாரம், 15 பேரு இவருக்கு எதிரா ஜி.எம்.,ட்ட போய் புகார் பண்ணுனதுக்கு, அவர் இவங்ககிட்ட மன்னிப்புக் கேட்டாராம்!''''அதே ஆவின்ல இன்னொருத்தர் மேலயும், ஏகப்பட்ட கம்பிளைன்ட் சொல்றாங்க. சின்னப் பொருள்ல இருந்து, ஆவினுக்கு வேண்டிய எல்லாத்தையும் ஒரே இடத்துலதான் வாங்குறாராம். எல்லாமே டபுள் மடங்கு விலையில வாங்கி, லட்ச லட்சமா சம்பாதிக்கிறாராம். அவர் மட்டும் விஜிலென்ஸ்ல எப்பிடி மாட்டாம தப்பிச்சார்னு எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கு!''

''அக்கா! ஆவின்ல சாதிப்பேரைச் சொல்லி ஒருத்தர் திட்டுறார்னு சொன்னீங்களே...சமீபமா, கோவையில இந்த மாதிரிப் புகார், நிறைய்ய வர ஆரம்பிச்சிருக்கு. இப்பிடி ஒண்ணு ரெண்டு இடத்துல உண்மையா நடக்குது. ஆனா பல இடங்கள்ல இதை வச்சே, ஒரு கும்பல் வசூல் வேட்டை நடத்துறதா தகவல் வருது. தாசில்தார், வி.ஏ.ஓ.,கிட்டப் போனாலும், 'அவுங்க கேக்குறதைக் கொடுத்துருங்க'ன்னு சொல்றாங்க!''

''அடக்கொடுமையே!''''குறிப்பா, சூலுார், கலங்கல் ஏரியாவுல ஒரு குரூப், பல பேரை மிரட்டி, பணம், நிலம்னு பறிச்சிட்டு இருக்குதாம். இந்த கும்பலுக்குப் பின்னால சில அரசியல் கட்சிகளும் இருக்குறதால, போலீசும் நடவடிக்கை எடுக்க பயப்படுறாங்க!''''கரெக்ட் மித்து! ரத்தினபுரி ஏரியாவுல இப்பிடித்தான் மதரீதியா மோதல் ஏற்படுறது மாதிரி, தொடர்ச்சியா பல சம்பவங்கள் நடந்துட்டு இருக்காம். ஆனா உளவுத்துறை போலீஸ் இதுவரைக்கும் 'அலர்ட்' பண்ணுனதாத் தெரியலை. போலீஸ் உடனே ஏதாவது பண்ணுனாத்தான் ஊர் அமைதியா இருக்கும்னு, அந்த ஏரியா மக்கள் பயப்படுறாங்க!''சொல்லி முடித்த கையோடு, பையை எடுத்துக் கொண்டு 'பைபை' காட்டி, வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X