வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த வழக்குக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில், பல்வேறு பணிகளுக்கு 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, அமைச்சராக பதவி வகித்த வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும், சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஆட்சி மாற்றம்
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, இந்த வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில், இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணை முடியும் வரை தடை விதிக்கவும் கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு:எனக்கு எதிரான புகாரில், ஆரம்பகட்ட விசாரணைக்கு, 2019 அக்டோபரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புகாருக்கு முகாந்திரம் இல்லை என விசாரணையில் தெரிய வந்தது. இந்த அறிக்கையை பரிசீலித்த பின், நடவடிக்கையை கைவிட, அரசு முடிவு செய்தது.மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், 2021 ஆகஸ்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
உள்நோக்கம்
ஆனால், மத்திய தணிக்கைத் துறை அறிக்கை அடிப்படையில், விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்; விசாரணை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது.
மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில், புதுடில்லி மூத்த வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு, வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகினர். ''உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு, தடை விதிக்க வேண்டும்,'' என்றனர்.
இதையடுத்து, 'வழக்கை ரத்து செய்யும்படி கோர, மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றாலும், அதை ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது. வழக்குக்கு தடை விதிக்க மறுத்த முதல் பெஞ்ச், மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25க்கு தள்ளி வைத்தது.