வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-கைதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்து, 'மாமூல்' வசூலிக்கும் போலீசார், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 147 சிறைகள் உள்ளன. இவற்றில், 23 ஆயிரத்து, 592 பேரை அடைக்கும் வசதி உள்ளது. தற்போது, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கான காவல் பணியில், 5,452 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கைதிகளை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பணியில், ஆயுதப்படை போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.வசதியான கைதிகளை ரகம் பிரிக்கும் போலீசார், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து, மாமூல் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
சிறையில், ஒரு கட்டு பீடி, 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் வெளிநாடு மற்றும் வெளி மாநில கைதிகளிடம் பணப்புழக்கம் அதிகம். இவர்களை சார்ந்து தான், சிறைத் துறை போலீசார் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சிறையில் இருந்தபடியே, தொழிலிலும் கொடி கட்டிப் பறப்பதாக கூறப்படுகிறது. சிறைகளில், 'ஸ்மார்ட் போன்' புழக்கமும் அதிகமாக உள்ளது. வசதிப் படைத்த கைதிகள், 'வாட்ஸ் ஆப்'பில், 'வீடியோ கால்' வாயிலாக உறவினர்களிடம் பேச, போலீசார் அனுமதிக்கின்றனர். இது தொடர்பான படங்களும் வெளியாகின.
தற்போது, மாமூல் வசூலிப்பு பெருகி விட்டதாக தெரிய வந்துள்ளது. மாமூல் தொகை, போலீசாரின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சிறைத் துறை போலீசாரின் நடவடிக்கைகள், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.இதுபற்றி, சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், '
தவறு செய்யும் போலீசாரை கண்காணிக்க, சிறைத் துறையில் உளவு போலீசார் உள்ளனர். மாமூல் போலீசாருக்கு உளவு பிரிவில் பணிபுரியும் சிலரும் உடந்தையாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி ரகசியமாக விசாரித்து வருகிறோம்' என்றனர்.