வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரையில் நேற்று 12 பேர் புதிதாக உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வீட்டுத் தனிமையில் இருந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தினமும் 10 பேருக்காவது கொரோனா தொற்று ஏற்படுகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
நேற்று முன்தினம் வரை 103 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 12 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போதுள்ள 103 பேரில் 25 சதவீதம் பேர் கிராமத்தில் உள்ளவர்கள். 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் மீதியுள்ளோர் வீட்டுத்தனிமையிலும் சிகிச்சை பெறுகின்றனர். உள்ளூர் மக்கள் மூலமே பரவி வருவதால் தொற்றின் வேகம் மெல்ல அதிகரித்து வருகிறது.
அரசு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார மையங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மூலம் தினமும் 400 முதல் 450 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்படுகிறது. சராசரியாக தினமும் 10 முதல் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஜூன் 2வது ஞாயிறில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 12 முதல் 15, 15 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அலுவலக வேலை நாட்களில் 2000 பேர் வரை தடுப்பூசி செலுத்துகின்றனர். ஞாயிறுகளில் கூட்டம் குறைகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரையும் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் 24 மணி நேர தடுப்பூசி முகாம் செயல்படுகிறது. அனைத்து தரப்பினருக்குமான 2 லட்சத்து 78ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதால் முகாமில் பயன்பெறுமாறு டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.