வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கட்சிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் உருவானதை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து விலக உத்தவ் தாக்கரே இரண்டு முறை முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே தலைமையில், பல எம்.எல்.ஏ.,க்கள், தலைமைக்கு எதிராக அணி திரண்டுள்ளனர்.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: கடந்த, 20ம் தேதி ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தியாளர்கள் குஜராத்தின் சூரத்துக்கு சென்றனர். இது குறித்து, 21ம் தேதி தான் தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த உத்தவ் தாக்கரே தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார். அன்று மாலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கட்சியினருடன் பேசியபோது, தன் முடிவை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.

கூட்டணியில் உள்ள மூத்த தலைவர்கள் அவரை சந்தித்து பேசி, சமாதானப்படுத்தினர். இதற்கடுத்த நாள், அதாவது, 22ம் தேதி நிலைமை கைமீறியதை உணர்ந்த உத்தவ் தாக்கரே, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். மீண்டும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசியதை தொடர்ந்து, அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உத்தவ் தாக்கரேயை சமாதானப்படுத்திய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் என்பதை தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அதே நேரத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்தான், உத்தவ் தாக்கரேயை சந்தித்து சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.