வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஊட்டி : பசுந்தேயிலைக்கு கிலோ, 30 ரூபாய் விலை வழங்கக்கோரி, நீலகிரி மாவட்ட விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரியில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, 150க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 22 ஆண்டுகளாக தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கிலோவுக்கு, 30 ரூபாய் வழங்கக்கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கோரிக்கை நிறைவேறவில்லை.

தற்போது கிலோவுக்கு, 10 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.இந்நிலையில், குறைந்த பட்ச ஆதார விலை 30 ரூபாய் வழங்க வலியுறுத்தி, தேயிலை பறிப்பதை நிறுத்தி, விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டத்தால், 12 லட்சம் கிலோ தேயிலை வினியோகம் நிறுத்தப்பட்டது.
மாவட்ட சிறு விவசாயிகள் நலசங்க தலைவர் போஜன் கூறுகையில்,''இன்று (நேற்று) ஒரு நாள், தேயிலை பறிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னைக்கு, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.