சென்னை: விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மாநாடு இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: விளையாட்டுத் துறையில் முன்னோக்கியப் பாய்ச்சலில் தமிழகம் இன்று சென்று கொண்டிருக்கிறது. வரும் ஜூலை 28ம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்கவிருப்பது நமக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பெருமை. 200 நாடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், பங்கேற்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா முதல்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கிறது.
சதுரங்க விளையாட்டில் இருக்கிற ஒரு குதிரை போலவே, லோகோ வடிவமைக்கப்பட்டு, அது வணக்கம் சொல்லக்கூடிய வகையில் காணப்பட்டது. தமிழ் முறைப்படி அது வேட்டி,சட்டை அணிந்துகொண்டு அதற்கு தம்பி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த போட்டிக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ள நேரத்தில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்தமாக இருக்கிறது. நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவறவிடமாட்டேன். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பவன். மேயராக இருந்தபோதும், கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன்.
கம்பீரமான துறைதான் இந்த விளையாட்டுத்துறை. இத்தகைய விளையாட்டுத்துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு அறிவிப்பை செய்தோம். அதாவது ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடியவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடியவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்லக்கூடியவர்களுக்கு ரூ.1 கோடி என்று அறிவித்தோம். இது மிகப்பெரிய பரிசுத்தொகை. விளையாட்டு வீர்களுக்கு முதலில் தேவையானது ஊக்கம்தான். அந்த ஊக்கத்தை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் இந்த அறிவிப்பை செய்தோம். டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 55 லட்சம் ரூபாய் வழங்கினோம். விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான, தாராளமான உதவிகளை இந்த அரசு செய்துகொண்டுள்ளது, செய்யவும் போகிறது" என்று அவர் கூறினார்.