வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ‛கூட்டணி ஆட்சி அமைத்ததும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் கூறினர், ஆனால் சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக' மஹாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரே வேதனை தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சில சிவசேனா எம்எல்ஏ.,க்களுடன் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார். தன்னுடன் இருக்கும் 38 சிவசேனா எம்எல்ஏ.,க்கள் அரசு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார். இதனால் மஹா., அரசு பெரும்பான்மையை இழந்து, கவிழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், சிவசேனா தொண்டர்கள் மத்தியில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பேசியதாவது: முதல்வர் உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் இருந்தபோது, அவர்கள் (அதிருப்தி எம்எல்ஏ.,க்கள்) தங்களை லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் விற்றுவிட்டனர்.

கவுஹாத்தியில் இரண்டு குழுக்கள் உள்ளன. அதில் 15,16 பேர் கொண்ட ஒரு குழு எங்களுடன் தொடர்பில் உள்ளது. மற்றொரு குழுவில் உள்ளோருக்கு தைரியமும் ஒழுக்கமும் இல்லை. முதல்வர் இக்கட்டான சூழலில் இருந்தபோதும் முழு சதித்திட்டத்தை தீட்டினர். யார் திரும்ப வர விரும்பினாலும், எங்கள் கதவுகள் திறந்திருக்கும். அதிருப்தியில் இருப்பவர்கள் உண்மையிலேயே தைரியம் இருந்தால், ராஜினாமா செய்யுங்கள். எங்கள் முன் நிற்க தைரியம் வேண்டும். கூட்டணி ஆட்சி அமைத்ததும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் தங்களுக்கு துரோகம் செய்வார்கள் என பலர் தங்களிடம் கூறினர். ஆனால், சொந்த கட்சியினரே தங்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.

வாட்ச்மேன்கள், ரிக்ஷா ஓட்டுனர்கள், பெட்டிக் கடைக்காரர்கள் என இருந்தவர்களை எம்எல்ஏ.,க்கள், அமைச்சர்களாக ஆக்கினோம். மே 20ம் தேதி ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதல்வர் பதவி வழங்குவதாக உத்தவ் தாக்கரே கூறினார். ஆனால் தற்போது ஏக்நாத் நாடகம் நடத்துகிறார். அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் செயல்களால் கட்சி தொண்டர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் கவுஹாத்தியில் வெள்ளத்தால் மக்கள் உணவு, இருப்பிடம் இன்றி தவித்து வரும் சூழலில், அங்குள்ள ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவர்களின் ஒரு சாப்பாட்டு செலவு ரூ.9 லட்சம் என தெரியவந்துள்ளது. தனியார் ஹெலிகாப்டர்களில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். வெள்ளத்தால் மக்கள் அல்லல்படும் சூழலில் இது அவர்களுக்கு அவமானமாகும். இவ்வாறு அவர் பேசினார்.