வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கவுகாத்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மும்பை வந்து தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன் வர வேண்டும் என மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: உங்களில் பலர் இன்னும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். நீங்கள் இன்னும் சிவசேனாவின் இதயத்தில் உள்ளீர்கள். சில எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினர் என்னை தொடர்பு கொண்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர். கடந்த சில நாட்களாக கவுகாத்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் குறித்து சில தகவல்கள் வந்து கொண்டுள்ளன. சிவசேனா குடும்பத்தின் தலைவன் என்ற முறையில், உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன். குழப்பங்களை அகற்றுகிறேன். நாம் அமர்ந்து பேசி தீர்வு காண்போம். உங்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை; காலம் கடந்துவிடவில்லை. தயவு செய்து வந்து அமர்ந்து பேசுங்கள். சிவசேனா தொண்டர்கள் மற்றும் மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை அகற்றுங்கள். நீங்கள் முன்வந்து பேசினால், நாம் தீர்வுக்கான வழியை காணலாம். இவ்வாறு அந்த கடிதத்தில் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை திரும்புகிறார் ஷிண்டே

இதனிடையே, கவுகாத்தியில் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: விரைவில் மும்பை சென்று, பால் தாக்கரேவின் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். என்னுடன் 50 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள் விருப்பப்பட்டே என்னுடன் வந்தனர். நாங்கள் விரைவில் மும்பை திரும்பி கவர்னரை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.