புதுடில்லி:ஜெர்மனியில் நடந்த 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அளித்த இந்தியக் கைவினைப் பொருட்கள் பரிசுகளை பார்த்து உலகத் தலைவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு செல்லும்போது தான் சந்திக்கும் தலைவர்களுக்கு பல பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக நம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்களைத் தேர்வு செய்து அவர் பரிசாக வழங்குவார்.
அந்த வகையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடந்த, ஜி - 7 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடி, அங்கு வந்த உலகத் தலைவர்களுக்கு இந்திய கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினர். அவற்றின் கலையம்சங்கள், நுட்பமான தொழில் திறன் உள்ளிட்டவற்றை பார்த்து உலகத் தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
மாதுளை விதை பசை
அமெரிக்க அதிபருக்கு, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தயாரிக்கப்படும் குலாபி மீனாகாரி என்ற சிறப்பு வாய்ந்த கலைப் பொருளை மோடி பரிசாக அளித்தார். இது புவிசார் குறியீடு பெற்றுள்ளது. வாரணாசியில் கிடைக்கும் மீனா கண்ணாடி துாளாக்கப்பட்டு, மாதுளை விதை பசை மூலம் ஒட்டப்படுகிறது. மிகுந்த கலை வேலைபாடுகள் உடையது
இந்த கலைப் பொருள். குலாபி எனப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.இதைத் தவிர அமெரிக்க அதிபருக்கும், அவருடைய மனைவிக்கும் உடை அலங்கார ஆபரணத்தையும் மோடி வழங்கியுள்ளார்.
மாநாட்டுக்கு தன்னை அழைத்த ஜெர்மன் பிரதமருக்கு, உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் தயாரிக்கப்படும், உலோகத்திலான கலையம்சம் நிறைந்த குடுவையை வழங்கினார்.
உத்தர பிரதேசத்தின் நிஜாமாபாதில் தயாரிக்கப்படும் கறுப்பு நிற மண் பாண்டங்களை, ஜப்பான் பிரதமருக்கு வழங்கினார். பிரிட்டன் பிரதமருக்கு, பிளாட்டின நிறத்திலான கலையம்சம் நிறைந்த தேனீர் கோப்பைகளை வழங்கினார்.
வாசனை திரவியம்
பிரான்ஸ் அதிபருக்கு, லக்னோவில் புகழ்பெற்ற இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியத்தை வழங்கினார். இது காதி பட்டால் உருவாக்கப்பட்ட பிரான்ஸ் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தோனேஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ராமாயண கலாசார பிணைப்பை விளக்கும் வகையில், ராம தர்பார் சிலையை அந்த நாட்டு பிரதமருக்கு மோடி வழங்கினார்.
உலகப் புகழ்பெற்ற காஷ்மீர பட்டு தரைவிரிப்பை, கனடா பிரதமருக்கு வழங்கினார்.
அதுபோல, சத்தீஸ்கரில் புகழ்பெற்ற டோக்ரா கலைப் பொருட்களை, தென் ஆப்ரிக்கா, ஆர்ஜென்டீனா அதிபர்களுக்கு வழங்கினார்.
ஜெர்மனியில் தன் பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு புறப்பட்டார்.