வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துணை ஜனாதிபதி தேர்தல் ஆக., 6ல் நடக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று(ஜூன் 29) வெளியானது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதி முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ல் நடக்கிறது.
ஆலோசனை
இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஒடிசாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆக., 10ல் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன் தேர்தல் நடத்தி, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது விதி. தேர்தல் தேதிக்கான அறிவிப்பை, பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கு, 60 நாட்கள் முன்னதாக அறிவிக்க வேண்டும் என்பது மரபு.
இந்நிலையில், துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆக., 6 ல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜூலை 5 ல் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. கடைசி தேதி ஜூலை 19. ஜூலை 20ல் வேட்புமனு மீதான பரிசீலனை நடக்கிறது. ஜூலை 22ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி தேதி. ஆக.,6 ல் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பா.ஜ.,வின் பலம்
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.,க்கள் உட்பட அனைத்து எம்.பி.,க்களும் ஓட்டளித்து துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பர். ராஜ்யசபாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் 233 பேரும், நியமன எம்.பி.,க்கள் 12 பேரும் உள்ளனர்.
லோக்சபாவில் 543 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களும், இரண்டு நியமன எம்.பி.,க்களும் உள்ளனர். இரு சபைகளின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது.லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு 303 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 92 எம்.பி.,க்களும் சேர்த்து மொத்தம், 395 எம்.பி.,க்கள் உள்ளனர்.கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால், பா.ஜ.,வின் பலம் 430க்கு மேல் உயரும். எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் 360 ஆக உள்ளது. எனவே, துணை ஜனாதிபதியாக தே.ஜ., கூட்டணி வேட்பாளர் சுலபமாக வெல்லும் நிலையே உள்ளது.
- புதுடில்லி நிருபர் -