பாகல்கோட் : ''மும்பையில் தங்கியிருந்த தற்போதைய 12 அமைச்சர்களின் கட்டில், 'சிடி'க்கள் சட்டசபை தேர்தல் வேளையில் வெளிவரும்,'' என மாநில ம.ஜ.த., தலைவர் இப்ராகிம் தெரிவித்தார்.
ம.ஜ.த.,வை பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் இப்ராகிம், நேற்று பாகல்கோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் அளித்த பேட்டி:கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது போன்ற சூழ்நிலை, மஹாராஷ்டிராவிலும் ஏற்பட்டுள்ளது. சிவசேனா எம்.எல்.ஏ.,க்களை வேறு மாநிலத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதற்கு முன் மும்பை சென்ற கர்நாடகா எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா, 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அவர்களுக்கு, 'கட்டில்' ஏற்பாடும் செய்யப்பட்டது. அவர்களின், 'சிடி'க்கள் உள்ளன.அதை ஒளிபரப்ப சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தடை பெற்றனர்.
அந்த, 'சிடி'யில் என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று மேலவை தலைவரை கூட்டத்தொடரில் வலியுறுத்தினேன். தடை வழங்கிய நீதிபதியாவது பார்க்க வேண்டும் அல்லவா. முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா மட்டுமின்றி, மும்பையில் தங்கியிருந்த 12 அமைச்சர்களும் தடை வாங்கியது ஏன்? ஆனாலும், தாங்கள் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்பது போல, விதான் சவுதாவில் பேசுகின்றனர்.
மொத்தம் 17, 18 சிடிக்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் வேளையில் அந்த, 'சிடி'யின் மர்மம் வெளியே வரும். தான் தடை வாங்கவில்லை என்று கோபாலய்யா கூறினார். அவருடைய உயரத்துக்கும், எடைக்கும் ஒன்றும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.இப்ராகிம் புதிய வெடிகுண்டை வீசியிருப்பது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.