சென்னை :ஜெயலலிதா வசித்த வீட்டை விற்க, அவரது அண்ணன் வாரிசுகள் முடிவு செய்த நிலையில், வீட்டை வாங்க யாரும் முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை போயஸ் கார்டனில், வேதா இல்லத்தில் ஜெயலலிதா வசித்து வந்தார். அவர் இருந்தவரை, அந்த வீடு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கோவிலாக இருந்தது. பல்வேறு கட்சி தலைவர்கள் வந்து சென்றஇல்லம். பிரதமர் மோடியும் வந்து சென்றுள்ளார்.ஜெயலலிதா இருந்த வரை, அவர் வீடு இருந்த பகுதி, போலீசாரின் பாதுகாப்பு வளையத்திலேயே இருந்தது. அவரது மறைவுக்கு பின், வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தீபா, தீபக் வசமானது
சில அறைகளுக்கு, 'சீல்' வைத்தனர். தொண்டர்கள் வருவது குறைந்தது. அப்போது, அ.தி.மு.க., ஆட்சி இருந்ததால், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க முடிவு செய்து, வீடு மற்றும் இடத்தை அரசு கையகப்படுத்தியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் நீதிமன்றம் சென்றனர். தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்து, தி.மு.க., ஆட்சியை பிடித்தது. எனவே, தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல் முறையீடு செல்லவில்லை. வீடு தீபா, தீபக் வசமானது.அவர்கள் தற்போது, வீட்டை விற்க முடிவு செய்து, தங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களிடமும் பேசியதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி
ஜெயலலிதா வீட்டை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்த்த நிலையில், ஏதாவது காரணங்களை சுட்டிக்காட்டி, தங்களுக்கு வீடு வேண்டாம் என கூறிவிட்ட தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் கோர்ட் விவகாரம், வருமான வரித்துறை சிக்கல் என, அடுத்த கட்டமாக ஏதும் பிரச்னைகள் வரக்கூடாது என்பதால், தவிர்த்திருக்கலாம் என, கூறப்படுகிறது. ஜெயலலிதா வீடு விற்பனை என்ற தகவல் அ.தி.மு.க., தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், 'வீடு விற்பனை என்று வரும் தகவல் தவறானது; அப்படி எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை' என, தீபாவின் கணவர் மாதவன் தெரிவித்தார்.