சேலம் : அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சேலத்தில், பழனிசாமி கையில் வேலுடன், 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷத்தின் வெளிப்பாடாக, தென் மாவட்டங்களில் பன்னீர்செல்வத்துக்கும், கொங்கு மண்டலத்தில் பழனிசாமிக்கும் ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், சேலத்தில் மலர் கிரீடம், கழுத்தில் மாலையுடன், பழனிசாமி கையில் வேல் வைத்திருக்கும் படத்துடன், 'சூரசம்ஹாரம் ஸ்டார்ட்' என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதை மாநகராட்சி அ.தி.மு.க., கொறடா செல்வராஜ், மாவட்ட செயலர் வெங்கடாசலம் ஒட்டியுள்ளனர். அவர்களின் பெயர் போஸ்டரில் உள்ளது.
நேற்று முன்தினம் ஒட்டப்பட்ட போஸ்டரை, சில இடங்களில் இரவோடு இரவாக சிலர் கிழித்துள்ளனர்.இது குறித்து, அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:ஜெ., மறைவுக்கு பின், முதல்வர் பொறுப்பை ஏற்ற பழனிசாமி, முதல் கட்ட போரில் பன்னீர்செல்வத்தை வென்றார். இரண்டாவது கட்டமாக கட்சியை பன்னீர்செல்வத்திடம் இருந்து முழுமையாக மீட்க 'சூரசம்ஹாரத்தை' கையில் எடுத்துள்ளார்.
அதை குறிப்பிடும் வகையில் தான் போஸ்டர் ஒட்டி உள்ளோம். ஒற்றை தலைமை விவகாரத்தில் வெற்றி பெற்று, விரைவில் பொதுச்செயலர் பதவியில் பழனிசாமி அமர்த்தப்படுவார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.