வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'முககவசம் அணியாத பயணியர், விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை' என, சென்னை விமான நிலையம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் கட்டாம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது. முக கவசம் அணியாதவருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணியருக்கு மீண்டும் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி, விமான நிலையத்திற்கு வரும் பயணியர், கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையம் வரும் பயணியர், முக கவசம் அணியவில்லை எனில், விமான முனையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
விமான நிலையத்திற்கு உள்ளும், பயணத்தின் போதும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சில சூழ்நிலைகளுக்கு, விலக்கு அளிக்கப்படும் இடங்களில் மட்டும், முக கவசத்தை நீக்கி கொள்ளலாம்.கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத பயணியருக்கு, அரசு உத்தரவுப்படி அபராதம் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.