வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை மாநகராட்சியில், நேற்று நடந்த மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசவும், கேள்வி கேட்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால், கவுன்சிலர்கள் கொதிப்படைந்தனர்.

கொரோனா பரவலை காரணம் காட்டி, கூட்டத்தை விரைந்து முடிப்பதாக மேயர் கூறிய நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வித விவாதமும் இன்றி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு, பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில், 17 பேருக்கு மட்டுமே கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. பின், கவுன்சிலர்கள் தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து பேசவும், கேள்வி எழுப்பவும் வாய்ப்பு வழங்கும் பூஜ்ஜிய நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, தி.மு.க.,வைச் சேர்ந்த கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகர், ''இந்த கூட்டத்தில், சீனியர் உறுப்பினர்களான எங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை.''பூஜ்ஜிய நேரத்தில் தான், கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளை பற்றி சொல்ல முடியும். ஆனால், அதை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கவுன்சில் கூட்டத்தை நாள் முழுதும் நடத்த வேண்டும்,'' என்றார்.
இவரது பேச்சை, பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமின்றி, இதர கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வரவேற்றனர்.இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ''கடந்த மாமன்ற கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள் தவிர்த்து, பேசாத உறுப்பினர்களுக்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது இல்லை,'' என்றார்.

இதற்கிடையே தி.மு.க.,வைச் சேர்ந்த ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், ''கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாகவே, மேயர், துணை மேயர், கமிஷனர், மண்டலக்குழு தலைவர்களுடன் ஆலோசித்து, பூஜ்ஜிய நேரம் தவிர்க்கப்பட்டது,'' என்றார்.
அவரது பேச்சை மேயர் பிரியாவும் ஆமோதித்தார். அதன் பின், எவ்வித விவாதத்திற்கும் வழிவகுக்காமல், 100 தீர்மானங்களை நிறைவேற்றி, தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக, மேயர் பிரியா அறிவித்தார். மேயரின் இந்த செயல், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலை காரணம் காட்டி, ஒன்றரை மணி நேரத்தில் முடிக்கப்பட்ட கூட்டத்தில், கவுன்சிலர்கள் அனைவரும் தொற்று எளிதாக பரவும், 'ஏசி' அறையில், சமூக இடைவெளியின்றி, இடநெருக்கடியில் அமர்ந்திருந்தனர். துணை மேயர் உட்பட பெரும்பாலான கவுன்சிலர்கள் முக கவசம் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சர்வாதிகாரம்!
கூட்டத்திற்கு பின், மாநகராட்சி அ.திமு.க., மன்ற செயலர் கார்த்திக் கூறியதாவது:மன்ற கூட்டத்தில் கேள்வி நேரம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூற அனுமதிக்கப்படாமல், சர்வாதிகாரி போல் நடந்து கொள்கின்றனர்; கூட்டத்தை விரைந்து முடித்துவிடுகின்றனர். எந்த திட்டத்தையும் விரைந்து செயல்படுத்துவது இல்லை. ஆனால் கூட்டத்தை மட்டும் விரைந்து முடிக்கின்றனர். விவாதம் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றுவது வருத்தமாக உள்ளது. இந்த ஆட்சி மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என்பதற்கு, மாநகராட்சி கூட்ட செயல்பாடுகளே சாட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டிய கவுன்சிலர்!
மாநகராட்சிக்கு உட்பட்ட, 78வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வேலு பேசுகையில், ''சூளை நெடுஞ்சாலை, முனுசாமி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் துார் வாரப்படாமல் உள்ளது. 2021ம் ஆண்டில் இருந்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை.''தற்போது, துார் வாரப்படாத நிலையில், அது குறித்து, 'தினமலர்' நாளிதழ் அரை பக்கம் செய்தி வெளியிட்டுள்ளது. இப்பகுதி வெள்ள அபாயத்தில் சிக்காமல் இருக்க, விரைந்து நடவடிக்கை தேவை,'' என்றார்.
அதற்கு பதிலளித்த பொறுப்பு கமிஷனர் பிரசாந்த், ''கொசஸ்தலை ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் சென்னை ஐ.ஐ.டி., வழிகாட்டுதல்படி, தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை விரைந்து எடுப்பார்,'' என்றார்.
அதே போல், 134வது வார்டை சேர்ந்த பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் பேசுகையில், ''என் வார்டில் மழை நீர் வடிகால்வாய் பணி நடைபெறுகிறது. மழை நீர் சீராக வடிந்து செல்லும் வகையில், மாம்பலம் கால்வாய் சீரமைக்கப்படுமா?
''வார்டில் பூங்காக்கள் இல்லை. இருக்கும் உடற்பயிற்சி கூடமும் புனரமைக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா,'' என்றார்.இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ''உறுப்பினரின் கோரிக்கையை நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.