வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையில் கட்டட வரைபட அனுமதி பெறுவது தொடர்பான கோப்புகளை கிடப்பில் போடாமல் இருக்க, உதவி/ இளம் பொறியாளர்களுக்கு அதிகாரம் வழங்கி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

கோவை நகரில், 10 ஆயிரம் சதுரடிக்கு குடியிருப்பு கட்டடங்கள், 2,000 சதுரடிக்குள் வணிக கட்டடம் கட்டுவதாக இருப்பின், மாநகராட்சியில் விண்ணப்பித்து கட்டட வரைபட அனுமதி பெற வேண்டும். இக்கோப்புகள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் பிரதான அலுவலகங்களில் கிடப்பில் போடப்படுவதால், விண்ணப்பதாரர்கள் மாதக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிறது. இதற்கு தீர்வு காண, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்து, அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.
உதவி/ இளம் பொறியாளர்களுக்கான வேலைகள்:
* கட்டட அனுமதி, மனைப்பிரிவு, மனை வரன்முறைப்படுத்தும் கோப்புகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
* எழுத்தர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களில் வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து, கட்டண தொகை செலுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்.
* கட்டட அனுமதி வழங்கிய பின், கட்டுமானங்கள் ஒவ்வொரு நிலையிலும் வரைபட அனுமதிப்படி கட்டப்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்.
* சம்மந்தப்பட்ட வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 'மியாவாக்கி' முறையில் அடர் வனம், பூங்கா அமைத்தல், போக்குவரத்து தீவுத்திடல் அமைவிடங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
* மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை கண்டறிந்து அகற்ற வேண்டும்.
* அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுதல், தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நகரமைப்பு பிரிவு சம்பந்தப்பட்ட வழக்குகள், அனைத்து வித மனுக்களுக்கு உரிய பதில் வழங்க வேண்டும்.

உதவி நகரமைப்பு அலுவலர்களுக்கான பொறுப்பு
* உதவி/ இளம் பொறியாளர்களது பணிகளை கண்காணித்தல், கோப்புகளை பரிசீலித்து ஆய்வு செய்து சமர்ப்பித்தல் மற்றும் அனுமதியற்ற விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புகள், அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை கண்டறிந்து அறிவிப்பு வழங்கி, அகற்ற வேண்டும்.
நகரமைப்பு அலுவலருக்கான பொறுப்பு
உதவி நகரமைப்பு அலுவலர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்து ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நகர பொறியாளர் (பொ)க்கு கோப்புகளை அனுப்ப வேண்டும்.
நகர பொறியாளர் (பொ) பொறுப்பு
நகரமைப்பு பிரிவு கோப்புகளை மேலாய்வு செய்து, கட்டணம் செலுத்த ஒப்புதல் வழங்குதல். நகரமைப்பு அலுவலர் அளிக்கும் ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல். 4,000 சதுரடி வரையிலான குடியிருப்புகளுக்கு கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கோப்பு இறுதி ஒப்புதல் பெற, துணை கமிஷனருக்கும், 4,000 சதுரடிக்கு மேல் உள்ள குடியிருப்பு, அனைத்து வணிக கட்டடங்கள் மற்றும் மனைப்பிரிவு தொடர்பான இறுதி ஒப்புதலுக்கு, கமிஷனருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
'இனி, வேலை துரிதமாகும்'
நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'இத்தனை நாட்களாக, ஒரு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டு பணிகளையும் உதவி நகரமைப்பு அலுவலர் ஒருவரே செய்ய வேண்டியிருந்தது. இனி, அந்தந்த வார்டுகளை கவனிக்கும் உதவி/ இளம் பொறியாளர்களே செய்து விடுவர். உதவி நகரமைப்பு அலுவலர்கள் மேலாண்மை செய்தால் போதும். இனி, வேலை துரிதமாக நடக்கும். ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாம். ரிசர்வ் சைட்டுகளை மீட்கலாம். அனுமதிக்கு மாறாக கட்டப்படும் விதிமீறல் கட்டடங்களை, எளிதில் கண்டறியலாம்' என்றனர்.