வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி : 'காலாப்பட்டு தொகுதியில், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதால் புதிதாக தொழில் துவங்க எவரும் முன்வருவதில்லை' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்., சார்பில் நேற்று காலாப்பட்டில் சத்யாகிரகப் போராட்டம் நடந்தது.போராட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், வட்டார தலைவர் முகுந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை துவக்கி வைத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
மோடி தலைமையிலான மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான அரசு. மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டு, மீனவர்களுக்கு தனி துறையை உருவாக்கி உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை.

நிர்வாகத்தை கையில் எடுக்க தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை எனக் கூறும் கவர்னர் தமிழிசை, நிலம் சம்பந்தமான அதிகாரத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டது ஏன். காலாப்பட்டு தொகுதியில் தொழில்முனைவோர் எந்த ஒரு தொழிலும் தொடங்க முடியவில்லை, தொழிற்சாலை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கப்படுகிறது. இதனால், தொழில் முனைவோர் புதிய தொழில் துவங்குவதற்கு புதுச்சேரிக்கு வர அஞ்சுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.