இந்தப் பொறப்புதான்.. நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது… எனச் சொல்லியே வயிறு முட்ட சாப்பிடக் காரணம் சொல்வோர் உண்டு. ஆனால், அதுவே இரவுச் சாப்பாடு இப்படி அளவில்லாமல் சாப்பிட்டால் அன்றைய இரவு தூக்கமில்லா சிவராத்திரியாக மாறக் கூட வாய்ப்புண்டு. அளவுக்கதிகமான உணவே இரவில் நம்மை தூங்கவிடாமல் தொல்லை தரும். குறிப்பாக வயிறு, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், புளித்த ஏப்பம் மற்றும் வலி போன்றவற்றை ஏற்படுத்த கூடும்.
நமது குடல் பல்வேறு உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உண்ணும் உணவுகளை பதப்படுத்துவதைத் தவிர, ஆரோக்கியமான குடல் நமது உடலை சீராக இயங்க உதவுகிறது. உங்களுக்கு அடிக்கடி அஜீரணம், வயிற்று எரிச்சல், உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கிறதா என கவனியுங்கள்.
உங்கள் குடல் செயல்பாட்டை மேம்படுத்த விரும்பினால், வாழ்க்கை முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். நம் குடலை மீட்டெடுக்கவும், அதை மீண்டும் சிறப்பாக செயல்பட ஆறு எளிய குறிப்புகளை இப்போ பார்க்கலாம்.
1. நல்ல கொழுப்பு உள்ள உணவுகள்:
நம் குடலில் உள்ள டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் சுறுசுறுப்பாக இயங்க ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை. நெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் போன்றவை, ஆரோக்கியமான கொழுப்புகளை தரும். இதையே உங்கள் சமையலுக்கு பயன்படுதலாம். முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை எடுத்து கொள்ளலாம். இவை அறிவு வளர்ச்சிக்கும் உதவும். கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
2. குடலுக்கு இயற்கையான புரோபயாடிக்குகளை தேவை:
புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. தயிர், கேஃபிர், பழையசோறு, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் போன்ற உணவுகளில் நல்ல அளவு புரோபயாடிக்குகள் உள்ளன. இது குடல் செயல்பாட்டிற்கு மிகவும் நல்லது.
3. புரத உணவுகள்:
கொலாஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம். கொலாஜென் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், குடல் சரியாக வேலை செய்யவும் உதவுகிறது. இறைச்சி வகைகள், சிட்ரஸ் உணவுகள் மற்றும் மீன் போன்ற உணவுகள் சிறந்த தேர்வாகும்.
4. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்
சர்க்கரை உணவுகள், ஜங்க் புட்ஸ், பாக்கெட் உணவுகள் என பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடலுக்கு நல்லதல்ல. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்கலாம். வீட்டிலேயே நமக்கு விருப்பமானதை தயார் செய்துகொண்டால் இச்சிக்கல்களிலிருந்து தப்பலாம்.
5. மூலிகைகளுக்கு ஆம் சொல்லுங்கள்!
மூலிகைகளை உணவில் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமக்கு உண்டு. உணவே மருந்து என சொன்னதும் அதனால் தான். மூலிகைகள் உணவுகளுக்கு சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், குடலைப் பாதுகாக்கவும் செய்கிறது. எனவே, உங்கள் உணவில் இஞ்சி, பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம் போன்ற ஜீரணத்தை கூட்டும் மூலிகைகளை சேர்க்கவும். இவை மலச்சிக்கலையும் தீர்க்கும்.
6. விரதம்
உண்ணாவிரதம் உங்கள் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் அது அனைவருக்கும் பொருந்தாது. எனவே, உங்கள் உடல் வகையைப் ஏற்றவாறு, இன்டர்மீடியட் டயட்டை உங்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். குறிப்பாக மூன்று வேளை மட்டும் உண்ணுங்கள்; காய்கறிகளை நிறைய சேர்த்த கொள்ள தவறவாதீர்.
எதை சாப்பிட்டாலும் நன்கு மென்று விழுங்க வேண்டும். அவசர கதியில் விழுங்கும் உணவால் செரிமானக் கோளாறுகள் வரலாம். அத்துடன் சரியான இடைவெளியில் போதுமான தண்ணீர் அருந்துவது அவசியம். உணவு உண்ட பின் கூடுமானவரை வெந்நீரையே பருகி வருவது செரிமானத்துக்கு நல்லது. குடலியக்கம் சரியாயிருந்தால் நமக்கு வரும் பாதி நோய்கள் குறையும்.