வீட்டை அலங்கரிப்பதற்காக பல்வேறு பொருட்களை வாங்கினாலும் பர்னிச்சர்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. குறிப்பாக மர பர்னிச்சர்களையே பலரும் விரும்புகின்றனர். பயன்படுத்துவதற்கு வசதியாக இருப்பது மட்டுமின்றி நாகரிகத் தோற்றத்தையும் பிரமாண்டத்தையும் இவை தருகின்றன. 'எங்க தாத்தா காலத்து பீரோ, கட்டில் இது' என பாரம்பரியத்தை விட்டுத்தராமல் பயன்படுத்துவர்களும் உள்ளனர். அதேவேளையில், இந்த மேஜை இருந்தால் எங்க அப்பா என் கூடவே இருக்கும் உணர்வைத் தருகிறது' என நினைவுச் சின்னமாக போற்றுபவர்களும் உண்டு.
ஆனால், ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி வாங்கினாலும் சரி, பட்ஜெட்டுக்குள் என்றாலும் சரி, முறையாக பராமரிக்காவிட்டால், இவற்றின் ஆயுட்காலம் குறிப்பிட்ட சில ஆண்டுகளே. அதேவேளையில் கொஞ்சமாக நேரத்தை செலவழித்தால் அவை ஜொலிப்பதுடன், பல ஆண்டுகளுக்கு அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். எனவே, உங்களின் சோபா, மேஜை, கட்டில், டீவி யூனிட், நாற்காலி போன்ற மரபர்னிச்சர்கள் எப்பொழுதும் புதிது போல் அழகாக இருக்க மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்...
![]()
|
அடிக்கடி உங்கள் மர பர்னிச்சர்களின் மீது தூசி தட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மெல்லிய காட்டன் துணி அல்லது டஸ்டர்களை பயன்படுத்தி தூசி தட்டலாம். டஸ்ட் அலர்ஜி உள்ளவர்கள் காட்டன் துணியை சிறிதளவு தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். இதனால் மரச்சாமான்களின் மீது அழுக்கு படியாமல் சுத்தமாக இருப்பதால் பளபளப்பாக இருக்கும்.
மர பர்னிச்சர்களின் மீது சூரிய ஒளி மற்றும் தண்ணீர் படாதவாறு இருப்பது அவசியம். ஜன்னலுக்கு அருகில் வைக்கும் போது சூரிய ஒளி படுவதாலும், மழைக்காலங்களில் சாரல் காரணமாகவும், அவை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே வீட்டில் நிழலான இடங்களில் மரச்சாமான்களை வைப்பதால் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.
![]()
|
இவற்றை ஒரே அறையில் பல நாட்களாக வைத்திருக்கும் போது துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது. எனவே அவ்வப்போது வெயிலில் சிறிது நேரம் உலர வைக்கலாம். பேக்கிங் பவுடரை கட்டில், மேஜையின் இழுப்பறைகளில் வைக்கலாம்; கற்பூரம், கிராம்பு, வேப்பிலை போன்ற பொருட்களை வைத்தால் பூச்சித்தொல்லை குறையும்.
![]()
|
பர்னிச்சர்களின் பளபளப்பை அதிகரிப்பதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலீஷ் செய்யலாம்; தரமான பிராண்ட்களை பயன்படுத்தவும், விலைக்குறைவான பாலீஷ்கள் முதலில் பளபளப்பை அளித்தாலும் சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் செலவை இரட்டிப்பாக இழுத்துவிடும்.
மரச்சாமான்களை வேறு இடத்துக்கு மாற்றும்போது கவனமுடன் நகர்த்தியோ அல்லது தூக்கியோ வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தரைப்பகுதின் தளம், டைல்ஸ் போன்றவற்றில் கீறல் ஏற்படுவது மட்டுமின்றி மரத்தின் கீழ்ப்பகுதியும் பாதிக்கப்படும் வாய்புள்ளது.