சிலியில் தொழிலாளர் ஒருவர் வங்கி கணக்கிற்கு தவறுதலாக 286 மடங்கு சம்பளம் வரவு வைக்கப்பட, வேலையை ராஜினாமா செய்து விட்டு மாயமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் அமெரிக்க நாடான சிலியில் கன்சர்சியோ இண்டஸ்ட்ரியல் டி அலிமெண்டஸ் (சுருக்கமாக சியல்) என்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி வெட்டுக்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் சார்பில் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில், சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம்.
கடந்த மாதம் தொழிலாளர் ஒருவருக்கு சம்பளமாக 5 லட்சம் பெசோஸ் (இந்திய மதிப்பில் ரூ.43,000 ) அளிக்க வேண்டும். ஆனால் தவறுதலாக, 16,53,98,851 பெசோஸ் (அதாவது, இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி) தவறுதலாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர், தவறுதலாக சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து நிறுவனத்தின் மனிதவளத்துறை துணை மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விழித்து கொண்ட நிறுவனம், தனது வங்கி கணக்கை சரிபார்த்ததில், தவறு நடந்திருப்பதையும், 286 மடங்கு சம்பளம், தொழிலாளர் கணக்கிற்கு சென்றுள்ளதை உறுதி செய்துள்ளது. தொழிலாளியிடம், தனது கணக்கில் வந்த கூடுதல் பணத்தை, திருப்பி அனுப்ப நிறுவனம் கேட்டுகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர், தனக்கு கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையைத் திருப்பித் தர வங்கிக்கு செல்ல ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
![]()
|
இருப்பினும், கடந்த ஜூன் 2ம் தேதி வேலையை ராஜினாமா செய்துள்ள தொழிலாளர், உடனே தலைமறைவாகி உள்ளார். தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்ற தொழிலாளரிடம் சட்டரீதியாக பணத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையில் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது.